பாஜக தனது கூட்டணியில் 37-வது கட்சியாக அமலாக்கத்துறையையும் சேர்த்து தேர்தலில் வெற்றி பெறலாம் என்று எண்ணத்தில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்று டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை இன்று (ஜூலை 18) திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” திமுகவை தொந்தரவு செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த விசாரணையை அமலாக்கத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
பாஜக தனது கூட்டணியில் 37-வது கட்சியாக அமலாக்கத்துறையையும் சேர்த்து தேர்தலில் வெற்றி பெறலாம் என்று எண்ணத்திலே இதை செய்கிறார்கள். இது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கை.
எதிர்க்கட்சிகளை பார்த்து பாஜக எந்த அளவிற்கு அச்சத்தில் உள்ளது என்பதைத்தான் இது போன்ற நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன” என்றார்.
அப்போது அவரிடம் அமைச்சர் பொன்முடி தற்போது எப்படி இருக்கிறார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த டிகேஎஸ் இளங்கோவன் ,”பொன்முடி நன்றாக இருக்கிறார். அவர் அமலாக்கத்துறை விசாரணை குறித்து சிறிதும் கவலைப்படவில்லை. காரணம் அவருக்கு தெரியும்.. பொன்முடி அச்சத்தில் இல்லை. மகிழ்ச்சியாக இருக்கிறார்” என்றார்.
இன்று மாலை நடைபெற உள்ள விசாரணைக்கு பொன்முடி தயாராக இருக்கிறாரா என்ற கேள்விக்கு, ”விசாரணைக்கு ஆஜராக பொன்முடி தயாராக இருக்கிறார். பொன்முடி மடியில் கனம் இல்லை அதனால் அவருக்கு வழியில் பயம் இல்லை”என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அமலாக்கத்துறை அடுத்தகட்டமாக எந்த தவறான முடிவை மேற்கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் மற்றவை (நீதிமன்றம் செல்வது) குறித்து முடிவு எடுக்க முடியும்.
உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் கட்சி பாஜகதான். ஊழலில் மிக உயரத்தை பாஜக தொட்டு விட்டது. அறுபது ஆயிரம் கோடி ரூபாயை இருபது பணக்காரர்களுக்காக தள்ளுபடி செய்தது பாஜக. இது யார் வீட்டுப்பணம்.
களங்கம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக திட்டமிட்டு இதுபோல எதிர்க்கட்சிகளை பழிவாங்குகிறது என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும்.” என்றார்.
மேலும், கங்கையில் யாராவது மூழ்கினால் அவர்கள் புனிதமடைந்து விடுவார்கள், அவர்களது பாவம் தீர்ந்துவிடும் என்று சொல்கிறார்கள்.
அதேபோல பாஜகவில் யாரேனும் சேர்ந்து விட்டால் அவர்களை வழக்கில் இருந்து விடுவிப்பார்கள், உத்தமர் என்று சொல்வார்கள் என கூறினார் டிகேஎஸ் இளங்கோவன்.
தமிழ்நாடு சொல் அல்ல; தமிழரின் உயிர் : முதல்வர் ஸ்டாலின்
எதிர்கட்சிகள் கூட்டம்: மீண்டும் திமுகவை சாடிய மோடி
கருங்கடல் ஒப்பந்தம்: ரஷ்யா விலகல் – உணவு தானிய பஞ்சம் வருமா?
எடப்பாடிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு : உயர்நீதிமன்றம் தீர்ப்பு!