சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் காலை 7 மணிக்குத் தொடங்கி, தொடர்ந்து 8 மணி நேரமாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இன்று (ஜூலை 17) காலை திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து 60 வயது மதிக்கத் தக்க திமுக நிர்வாகி தனது தொகுதிக்குக் கலைக் கல்லூரி வேண்டும் என்று சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடி வீட்டுக்கு மனு கொடுக்க வந்துள்ளார்.
இந்நிலையில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் உள்ளே அழைத்து உட்கார வைத்து சில மணி நேரத்துக்குப் பின் வெளியே அனுப்பினர்.
வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் 8 மணிக்கு வந்தேன், கேட்டில் இருந்து எட்டிப்பார்த்தேன், உடனே அதிகாரிகள் என்னை உள்ளே இழுத்துக்கொண்டு மொபைல் போனையும் வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள். நான் ஹார்ட் பேசண்ட் வெளியே போக வேண்டும் என்று சொன்னேன். ஆனால் என்னை அனுப்பவில்லை. சில மணி நேரத்துக்குப் பின் என்னுடைய செல்போனை கொடுத்துவிட்டு என்னைக் கிளம்புங்கள் என்றனர்.
உள்ளே 5, 6 அதிகாரிகள் இருக்கின்றனர். அமைச்சர் உட்கார்ந்திருக்கிறார். என்னுடைய செல்போனில் இருந்து யார் யாருக்கு அழைப்பு போயிருக்கிறது என்று சரி பார்த்தனர்.
நான் என் தொகுதியில் கலைக் கல்லூரி வேண்டும் என்று கேட்க வந்தேன். என்னைப் பிடித்து உள்ளே போட்டுவிட்டனர். நான் எதையும் எடுத்துவரவில்லை. உள்ளே இருந்தும் எதுவும் எடுத்துச் செல்ல முடியாது என்று அதிகாரிகளிடம் கூறிவிட்டுதான் வந்தேன்” என்றார்.
பிரியா