governor rn ravi hastily read the judgement copy
சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை விவரங்கள் டிசம்பர் 21 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்த செய்தி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையிலும் எதிரொலித்திருக்கிறது.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாகவும் பல்வேறு பல்கலைக்கழகங்களின் நிர்வாக கட்டமைப்பு தொடர்பாகவும் தமிழ்நாடு ஆளுநருக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கும் இடையே தொடர்ந்து முரண்பாடுகள் எழுந்து வருகின்றன.
சமீப காலங்களாக வேந்தர் என்ற வகையில் ஆளுநர் கலந்து கொள்ளும் பல்கலைக்கழக விழாக்களில் உயர் கல்வித் துறை அமைச்சர் என்ற வகையில் பொன்முடி கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் சில வாரங்களுக்கு முன்பு பல்கலைக்கழக வேந்தராக தமிழ்நாடு முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற தமிழ்நாடு சட்டமன்றத்தின் சட்ட மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பி இருந்தார். உடனடியாக சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு மீண்டும் அவையில் நிறைவேற்றப்பட்டு அவை ஆளுநருக்கே அனுப்பப்பட்டன.
இப்படியாக ஆளுநருக்கும் அமைச்சர் பொன்முடிக்கும் நிர்வாக மோதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இதற்கிடையே சட்ட மசோதாக்களை காரணம் இன்றி ஆளுநர் நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருப்பதை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், ’இந்த விஷயத்தில் தமிழ்நாடு ஆளுநரும் முதலமைச்சரும் அமர்ந்து பேசி ஒரு சுமூக தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார். நீதிமன்றத்திலேயே முதலமைச்சரும் ஆளுநரை சந்திக்க தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆளுநரும் முதலமைச்சரை அழைத்ததாக தகவல்கள் வந்தன. இதற்கிடையே வெள்ள நிவாரணப் பணிகளை முடித்துவிட்டு ஆளுநரை முதல்வர் சந்திக்க இருப்பதாக கூறப்பட்டது.
இந்த சூழலில் டிசம்பர் 16 ஆம் தேதி ஆங்கில நாளிதழான தி இந்துவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பேட்டியில் ஆளுநருடனான சந்திப்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்தார்.
“ஆளுநர் தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு அவரை நான் பல முறை சந்தித்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். அரசு விழாக்களிலும் இருவரும் பல முறை பங்கெடுத்திருக்கிறோம். அப்போதெல்லாம் என்னிடம் இனிமையாகத்தான் பழகினார், பேசினார். எனவே நாங்கள் இருவரும் சந்திப்பதல்ல, பிரச்சினை. ஆளுநர் மனம் மாறி தமிழ்நாட்டின் நலன்களுக்காக செயல்பட வேண்டும் என்பதே மாநில மக்களின் எதிர்பார்ப்பு.
தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கும், வளர்ச்சிக்கும் எதிரான சில சக்திகளின் கைப்பாவையாக அவர் செயல்படுவதைத் தவிர்த்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்’ என அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதைப் பார்த்து ஆளுநர் ரவி கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு இறுக்கமான அரசியல் சூழலில் தான் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த தீர்ப்பு தகவல் ஆளுநருக்கு கிடைத்ததும் அவர் புன்னகைத்ததாக ஆளுநர் மாளிகை வட்டாரங்களில் கூறுகிறார்கள். அது மட்டுமல்ல தீர்ப்பு நகலை விரைவாக பெற்று அதில் என்னென்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை ஆளுநர் ஆர்வம் எடுத்து முழுமையாக படித்ததாகவும் ஆளுநர் மாளிகை வட்டாரங்களை மேற்கோள் காட்டி அதிகாரிகள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-வேந்தன்
ரிலீஸுக்கு தயாரான கார்த்திக் நரேனின் ’நிறங்கள் மூன்று’!
நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?
governor rn ravi hastily read the judgement copy