Ponmudi case One more false testimony

பொன்முடி வழக்கு: மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்!

அரசியல்

அமைச்சர் பொன்முடி வழக்கில் ஓய்வு பெற்ற கனிம வளத்துறை துணை இயக்குனரான சுந்தரம்  இன்று (செப்டம்பர் 2) பிறழ் சாட்சியம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார்.

அப்போது கனிமவளத் துறையையும் அவர் கூடுதலாக கவனித்தார். இந்தக் காலத்தில் விழுப்புரம் மாவட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கௌதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வழக்கில் தொடர்புடைய லோகநாதன் ஏற்கெனவே இறந்துவிட்டார். இந்த வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக 67 பேர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை 6 பேர் சாட்சியம் அளித்தனர்.

ஏற்கெனவே வெவ்வேறு தேதிகளில் ஆஜரான ஓய்வு பெற்ற வானூர் வட்டாட்சியரும், முதல் சாட்சியுமான குமாரபாலன், ஓய்வு பெற்ற விஏஓ விஜயகுமாரன் ஆகியோர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.

இச்சூழலில், கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி கிராம உதவியாளர்கள் பூத்துறை ரமேஷ், கோபாலகண்ணன், சுரங்கத் துறை முன்னாள் துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியளித்தனர்.

இவர்களில் ரமேஷ், கோபாலகண்ணன் ஆகியோரும் பிறழ் சாட்சியம் அளித்தனர்.

இந்நிலையில், நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஆஜரான நில அளவைத் துறையில் முதுநிலை ஆய்வாளராகப் பணியாற்றிய நாராயணனும் பிறழ் சாட்சியமளித்தார்.

கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை சாட்சியமளித்த 6 பேரில் 5 பேர் பிறழ் சாட்சியமளித்தனர்.

இச்சூழலில், நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது அமைச்சர் க.பொன்முடி, பொன்.கெளதமசிகாமணி ஆஜராகினர்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (செப்டம்பர் 2) ஆஜரான ஓய்வு பெற்ற கனிம வளத்துறை துணை இயக்குனர் சுந்தரம் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார். அப்போது அவர், கட்டாயப்படுத்தி தன்னிடம் கையெழுத்து வாங்கியதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இந்நிலையில், வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்!

நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட பெண்: மகளிர் ஆணையம் கண்டனம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *