பொன்முடி வழக்கு : ஜூலை 6ல் தீர்ப்பு!

Published On:

| By Kavi

அமைச்சர் பொன்முடிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கில் ஜூலை 6ஆம் தேதி சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

தற்போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி 1996 முதல் 2001 வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீநகர் வடக்கு காலனியில் அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி இடத்தை போலி ஆவணம் தயாரித்து தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அபகரித்ததாக பொன்முடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த இடத்தில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

அந்த இடத்தை பொன்முடி தனது மாமியார் சரஸ்வதி பெயரில் பதிவு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இதுகுறித்து 2003 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, சார்பதிவாளர் புருபாபு, அப்போதைய சைதை எம்எல்ஏ கிட்டு உள்ளிட்ட 10 பேர் மீது 27.8.2003 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

2.9.2003 அன்று இவ்வழக்கில் தொடர்புடைய 10 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் 2017 ஆம் ஆண்டு பொன்முடி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ஏற்று 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 தேதி ரத்து செய்தது.

எனவே எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த சமயத்தில் அமைச்சர் பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, புருபாபு, சைதை கிட்டு ஆகியோர் உயிரிழந்து விட்டனர்.

மற்ற ஏழு பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. முன்னாள் ஆட்சியர் ராஜரத்தினம் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட சாட்சிகள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததால் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஜெயவேல் இன்று (ஜூலை 4) தெரிவித்துள்ளார்.

முன்னதாக சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் வேலூர் நீதிமன்றம் விடுவித்தது.

பொன்முடி மீதான மற்றொரு வழக்கான செம்மண் குவாரி வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!

அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்!

Ponmudi case Judgment on July 6