முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மனுதாரராக சேர்த்துக்கொள்ள கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு இன்று (ஜனவரி 23) தள்ளுபடி செய்யப்பட்டது.
2006-2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பொன்முடி மீது 2012ஆம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. இதில், லோகநாதன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார்.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கு நேற்று (ஜனவரி 22) விசாரணைக்கு வந்தபோது, கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகியோர் ஆஜராகினர். மற்றவர்கள் ஆஜராகாததற்கான காரணம் குறித்து திமுக தரப்பில் வழக்கறிஞர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே இவ்வழக்கில் தன்னையும் சேர்க்க கோரி அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டவர்கள் பிறழ் சாட்சியங்களாக மாறி வருவதால் வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் தன்னையும் சேர்க்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு மீதான உத்தரவு இன்று (ஜனவரி 23) பிறப்பிக்கப்படும் என்று விழுப்புரம் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
அதன்படி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட முந்தைய வழக்குகளின் தீர்ப்புகளை சுட்டிக் காட்டி, வழக்கில் தலையிடுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறி ஜெயக்குமாரின் கோரிக்கையை நிராகரித்தார் நீதிபதி பூர்ணிமா.
தொடர்ந்து ஜெயக்குமாரின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
”தலைவரின் குட்டி கதை”… ’லால் சலாம்’ ஆடியோ லாஞ்ச் அப்டேட்!
காங்கிரஸ் 300 இடங்களில் நிற்கலாம்: மம்தா பேச்சு… இந்தியா கூட்டணியில் தொடரும் குழப்பம்!