சொத்துக்குவிப்பு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது நான்கு வாரத்தில் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 29) உத்தரவிட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். இதையடுத்து இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் ஒரு மாதம் கால அவகாசம் வழங்கியிருந்தது. இதனையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்தார்.
அதில், தண்டனையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் மற்றும் தண்டனையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி சார்பில் சரணடைவதில் இருந்து விலக்கு கேட்டும் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஜனவரி 12-ஆம் தேதி இந்த வழக்கு நீதிபதி சதீஷ் சந்திர சர்மா முன்பு விசாரணைக்கு வந்தபோது, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்தநிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதி அபய்.எஸ்.ஓஹா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி ஆஜராகி, “பொன்முடி ஏற்கனவே எம்எல்ஏ-வாகவும், அமைச்சராகவும் இருந்துள்ளார். தேர்தல் நெருங்குவதை கருத்தில் கொண்டு சொத்துக்குவிப்பு வழக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்” என்ற வாதத்தை முன்வைத்தார்.
இதனையடுத்து நீதிபதி, “இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை நான்கு வாரத்தில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை (மார்ச் 4) பொன்முடி நீதிமன்றத்தில் சரணடைவதிலிருந்து விலக்கு தொடரும்” என்று உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“இந்தியா கூட்டணி போல திமுக கூட்டணி உடையலாம்”: ஜெயக்குமார்
தங்கையின் காதல் திருமணத்திற்கு… சாய் பல்லவியின் அன்பு பரிசு இதுதான்!