ponmudi assets case judgement
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளிகள் என டிசம்பர் 19-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கிய நிலையில், இன்று (டிசம்பர் 21) தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அப்போது பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரிலோ அல்லது காணொலி காட்சி வாயிலாகவோ ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, நீதிமன்றத்தில் ஆஜராக இன்று காலை 9.15 மணிக்கு பொன்முடி, அவரது மனைவி ஆகியோர் சைதாப்பேட்டையில் உள்ள இல்லத்திலிருந்து காரில் புறப்பட்டனர். அப்போது பொன்முடியின் காரில் தேசியக்கொடி அகற்றப்பட்டிருந்தது.
காலை 9.57-க்கு பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்தடைந்தனர். காரில் இருந்து இறங்கிய பொன்முடி, அவரது மனைவி ஆகியோரை வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நீதிமன்ற அறைக்கு அழைத்து சென்றார். அங்கு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக வழக்கறிஞர்களுடன் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார்.
நீதிபதி ஜெயச்சந்திரன் காலை 10.39 மணிக்கு தனது நீதிமன்ற சேம்பருக்கு வந்தார். அப்போது நீதிபதி முன்பாக பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரும் ஆஜரானார்கள். நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அதிகமாக திரண்டிருந்ததால், “குற்றவாளிகளுக்கு வழிவிடுங்கள்” என்று நீதிபதி கூறினார்.
மேலும் பொன்முடி மற்றும் அவரது மனைவியிடம், “தண்டனை குறித்து எழுத்துப்பூர்வமாகவோ அல்லது வாய்மொழியாகவோ ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?” என்று நீதிபதி கேட்டார்.
அப்போது கலக்கமான முகத்துடன் பொன்முடி நீதிபதியிடம், “இது மிகவும் பழமையான வழக்கு. எனக்கு 73 வயது. மனைவிக்கு 60 வயதாகிறது. இருவரது மருத்துவ அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளோம். அதனை கருத்தில் கொண்டு தண்டனை வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
பொன்முடி மனைவி விசாலாட்சி நீதிபதியிடம் கைகூப்பி, “குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்று கண்ணீரோடு கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து தண்டனை விவரங்களை வாசித்த நீதிபதி ஜெயச்சந்திரன், “பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சமும் அபராதம் விதிக்கப்படுகிறது.
அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை செல்ல நேரிடும். வழக்கில் ஏ1 குற்றவாளியான பொன்முடி தற்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருப்பதால் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது.
அடுத்த 30 நாட்களுக்குள் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் உச்சநீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேடிக்கொள்ளலாம். அதற்குள் உச்சநீதிமன்றத்தில் தீர்வு காண முடியாவிட்டால் கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும்” என்று உத்தரவிட்டார்.
நீதிபதி ஜெயச்சந்திரன் தண்டனை விவரங்களை வாசித்ததும், பொன்முடி மனைவி விசாலாட்சி நீதிமன்ற அறையிலேயே அழ ஆரம்பித்தார். தண்டனை விவரங்கள் அறிவிப்பிற்கு பிறகு காரில் ஏறி சைதாப்பேட்டை இல்லத்திற்கு பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரும் புறப்பட்டனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பொன்முடியை தொடர்ந்து இன்னும் சில நாட்களில் அடுத்த விக்கெட்: ஜெயக்குமார்
ponmudi assets case judgement