திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி, சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தால் மூன்று வருட சிறை தண்டனையும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறார்.
அவர் மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்பாக 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிற நிலையில் திமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் இது பற்றிய விவாதங்கள் சூடு பிடித்திருக்கின்றன.
இதற்கு முன்பு ஒவ்வொரு முறையும் திமுக மீது அதிமுக, பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தும் போதெல்லாம்…
“நாங்கள் என்ன ஜெயலலிதா போல மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர் என்று நீதிபதியால் கூறப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களா?”,
என்று அரசியல் அரங்கில் எதிர் கேள்வி எழுப்பி வந்தனர் திமுகவினர். நேற்று (டிசம்பர் 21) கூட பொன்முடியை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி இதுபோன்று தான் பேசியிருக்கிறார்.
இது மட்டுமல்ல சமீப வருடங்களில் செல்வகணபதி ஊழல் குற்றச்சாட்டால் தண்டனை விதிக்கப்பட்டு அவருடைய ராஜ்யசபா எம்பி பதவி திமுகவில் இருக்கும்போது பறிபோனது. (தற்போது அவர் உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்)
அதற்கு பிறகு கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வேலைக்கு பணம் வாங்கி மோசடி செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை எடுத்த மேல் நடவடிக்கையின் படி கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக புழல் சிறையில் இருக்கிறார்.
இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் திமுகவினர், “அதிமுகவில் இருந்தபோது அதிமுக ஆட்சி காலத்தில் ஊழல் செய்தவர்கள் அரசியல் ரீதியாக திமுகவுக்கு வந்த பிறகு அந்த ஊழலுக்காக தண்டிக்கப்படுகிறார்கள்.
பழி ஓரிடம் பாவம் ஓரிடம். இதெல்லாம் திமுக ஆட்சி காலத்தில் நடந்த ஊழல் அல்ல” என்றெல்லாம் சமாளித்து வந்தார்கள்.
ஆனால் இப்போது திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய 1980-களில் இருந்து திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வரக்கூடிய அமைச்சர் பதவியில் இருந்த பொன்முடியே ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனையும் பெற்றுள்ளார்.
இனிமேல் திமுக, ‘எங்கள் கட்சியில் இருந்து யாரேனும் ஊழல் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டுள்ளார்களா?’ என்று கேள்வி கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
கிறிஸ்துமஸ்: ஓசூரிலிருந்து கேரளாவுக்குச் செல்லும் வெள்ளை ரோஜாக்கள்!