வைஃபை ஆன் செய்ததும் திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் விழுப்புரம் மாவட்ட திமுக நிர்வாகிகள் திரண்டு நின்ற புகைப்படங்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது
“பிப்ரவரி 13ஆம் தேதி திமுகவில் அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மாற்றம், விழுப்புரத்தில் சற்று கூடுதல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

பொன்முடிக்கு ஷாக் தந்த மாவட்ட மாற்றம்!
இது தொடர்பாக மின்னம்பலத்தில் இன்று காலை, இப்படி பண்ணிட்டீங்களே? அதிருப்தியில் பொன்முடி- விழுப்புரத்தில் வெடிக்கும் கலகம் என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதாவது 13 ஆம் தேதி வரை அமைச்சர் பொன்முடியின் மகன் டாக்டர் கௌதம சிகாமணி மாவட்ட செயலாளராக இருந்த விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள… விழுப்புரம், வானூர், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து விழுப்புரம், வானூர் இரண்டை தனியாகப் பிரித்து விழுப்புரம் மத்திய மாவட்டமாக உருவாக்கப்பட்டது
மத்திய மாவட்ட செயலாளராக கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்டத்தின் தலைநகரம், கலைஞர் அறிவாலயம் அமைந்துள்ள விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதக சிகாமணியிடம் இருந்து எடுக்கப்பட்டு லட்சுமணனிடம் கொடுக்கப்பட்டதை பொன்முடி ஆதரவாளர்கள் அதிர்ச்சியோடு பார்த்தனர்.
விழுப்புரம் திரும்பிய பொன்முடி

நேற்று லட்சுமணன் முதலமைச்சரை சென்று சந்தித்து வாழ்த்து பெறும் போது, இந்த அதிருப்தியின் காரணமாகவே அமைச்சர் பொன்முடி சென்னையில் இல்லாமல் விழுப்புரத்திற்கு புறப்பட்டு விட்டார். விழுப்புரத்திற்கு புறப்படும் முன்பு முதலமைச்சரை சந்தித்து, தனக்கு கூடுதல் துறை ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்துவிட்டு… விழுப்புரத்தை மீண்டும் தெற்கு மாவட்டத்தில் இணைத்து அதை கௌதம சிகாமணி இடமே அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
இதே நேரம் இன்று பிப்ரவரி 15ஆம் தேதி மாலை 4 மணிக்கு புதிய மாவட்ட செயலாளர் லட்சுமணன் விழுப்புரத்திற்கு வருவதாக இருந்தது. அவர் விழுப்புரம் வரும்போது அவருக்கு யாரும் வரவேற்பு அளிக்கக் கூடாது என பொன்முடி ஆதரவாளர்கள் திட்டமிட்டனர். மேலும் விழுப்புரத்தை மீண்டும் டாக்டர் கௌதம சிகாமணியிடமே அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அறிவாலயத்தில் கோரிக்கை வைக்க பொன்முடி ஆதரவு நிர்வாகிகள் மேற்கண்ட நான்கு தொகுதிகளில் இருந்தும் இன்று பகல் திரண்டனர்.

தலைமையிடம் இருந்து சென்ற தகவல்!
இந்த தகவல்களை அறிந்த திமுக தலைமை அமைச்சர் பொன்முடிக்கு எச்சரிக்கை கலந்த தகவலை அனுப்பியிருக்கிறது. இதையடுத்து தனக்கு கூடுதல் துறை ஒதுக்கியதற்கு நன்றி தெரிவிக்கவே நிர்வாகிகள் அறிவாலயம் வருவதாக தலைமைக்கு தகவல் அனுப்பினார் பொன்முடி.
மேலும் பொன்முடியின் கோபத்தை தற்காலிகமாக தணிக்கும் வகையில் புதிய மாவட்ட செயலாளரான லட்சுமணனை மீண்டும் சென்னைக்கு அழைத்தது அறிவாலயம். அதனால் இன்று மாலை 4 மணிக்கு லட்சுமணனுக்கு விழுப்புரத்தில் அளிக்கப்பட இருந்த வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. புதிய மாவட்ட செயலாளராக அவர் நியமிக்கப்பட்டு அறிவிப்பு வந்து இரண்டு நாட்கள் ஆகியும் விழுப்புரத்தில் அவருக்கு ஆதரவாக பெரிய அளவில் போஸ்டர்களும் ஒட்டப்படவில்லை. லட்சுமணனுக்கு ஆதரவாக யார் யார் வெடி வெடித்தார்கள் என்பதை கூட பொன்முடி தரப்பு கவனித்து அவர்களை தொடர்பு கொண்டு எச்சரித்தது.
அறிவாலயத்தில் திரண்ட விழுப்புரம்

இந்த சூழலில் நூற்றுக்கணக்கான பொன்முடி ஆதரவாளர்கள் இன்று மாலை முதல் அறிவாலயத்தில் திரண்டனர்.
இரவு எட்டு மணி அளவில் முதலமைச்சர் ஸ்டாலினை பொன்முடி சந்தித்தார். பொன்முடி, ஆ ராசா ஆகியோர் மட்டும் ஸ்டாலினுடன் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி தங்கள் வசம் இருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தினார். அப்போது ஆ ராசா… முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பொன்முடியை சமாதானப்படுத்தியதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதே போல லட்சுமணனிடமும் திமுக தலைமை சில அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது என்று சொல்கிறார்கள். விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் தான், இவ்வாறு விழுப்புரம் அல்லாத மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளராக இருக்க முடியும் என்ற கேள்வியையும் லட்சுமணன் கோரிக்கையாக வைத்துள்ளார்.
பிப்ரவரி 15ஆம் தேதி இரவு இந்த பஞ்சாயத்து முடிந்த நிலையில்… ‘நல்ல அறிவிப்பு வரும்’ என பொன்முடி ஆதரவாளர்கள் நம்பிக்கையோடு கூறுகிறார்கள்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.