’இப்படி பண்ணிட்டீங்களே…’ அதிருப்தியில் பொன்முடி – விழுப்புரத்தில் வெடிக்கும் கலகம்!

Published On:

| By Aara

திமுகவில் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மாற்றத்தால் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் அமைச்சர் பொன்முடி கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், வானூர், விக்கிரவாண்டி, திருக்கோவலூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் தெற்கு மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்தார் முன்னாள் எம்.பி.யும் பொன்முடியின் மகனுமான டாக்டர் கௌதம சிகாமணி.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு முன்பாகத்தான் கௌதம சிகாமணிக்கு இந்த பதவியை கொடுத்தார் ஸ்டாலின். ponmudi angry vizhupuram dmk blast

இந்நிலையில், பிப்ரவரி 13-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில்… விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகரான விழுப்புரம், வானூர் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய விழுப்புரம் மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டு அதன் மாவட்ட பொறுப்பாளராக ஆர்.லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அதிமுகவில் இருந்து சில வருடங்களுக்கு முன்பு திமுகவுக்கு வந்தவர். 2021 சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தனது கட்டுப்பாட்டில் இருந்த விழுப்புரம், வானூர் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளும் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு லட்சுமணனிடம் ஒப்படைக்கப்பட்டதில் அமைச்சர் பொன்முடி கடுமையான அதிருப்தி அடைந்துள்ளார். 

மேலும், விழுப்புரம் நகரத்தில்தான் மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயம் அமைந்திருக்கிறது. தான் பார்த்துப் பார்த்துக் கட்டிய  கலைஞர் அறிவாலயத்தில் இனி லட்சுமணன் தான் அமரப் போகிறார் என்பதை பொன்முடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அறிவிப்பு வந்த அன்று  (பிப்ரவரி 13 ) இரவு சென்னையில் அமைச்சர் பொன்முடியை சந்தித்த லட்சுமணன்,  ’அண்ணே உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் எனக்கு வேணும்’ என கேட்டுள்ளார். அப்போதே பொன்முடி முகம் கொடுக்காமல் தான் பேசியுள்ளார்.

நேற்று பிப்ரவரி 14 ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதியிடமும், மாலை அறிவாலயத்துக்கு சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தும் வாழ்த்து பெற்றார் லட்சுமணன்.  ஆனால், இந்த  நிகழ்வின்போது பொன்முடியும் அறிவாலயத்தில் இல்லை. விழுப்புரம் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் யாரும்  நேற்று லட்சுமணனோடு வரவில்லை. முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், அவருடைய தம்பி மணிகண்டன், கண்டமங்லம், கோலியனூர் ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி என  ஒரு சில நிர்வாகிகளோடு மட்டுமே ஸ்டாலினை சந்தித்திருக்கிறார் லட்சுமணன்.

இதுகுறித்து திமுக வட்டாரத்தில் பேசினோம். ponmudi angry vizhupuram dmk blast

“நேற்று பகல் தலைமைச் செயலகத்தில் வனத்துறை சம்பந்தமான ஆய்வுக் கூட்டத்தை நடத்திய அமைச்சர் பொன்முடி அதன் பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

‘எனக்கு கூடுதல் துறை ஒதுக்கிருக்கீங்க… ரொம்ப நன்றி. ஆனால், இந்த கட்சிக்காக எவ்வளவு உழைச்சிருக்கேன். என் பையன் கடுமையா இப்ப உழைச்சிட்டு இருக்கான். நீங்க இப்படி பண்ணிட்டீங்களே? விழுப்புரம் ஹெட்குவாட்டர்ஸ். அதை எங்களிடம் இருந்து எடுத்துட்டீங்களே? இன்னிக்கி விழுப்புரத்தில் முக்கியமான கல்யாணங்கள் இருக்கு. அதனால நான் கிளம்புறேன்’ என்று ஸ்டாலினிடமே சொல்லிவிட்டு ஒரு சால்வை போட்டுவிட்டு விழுப்புரத்துக்கு புறப்பட்டு விட்டார் பொன்முடி

அதனால் நேற்று மாலை புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற போது அறிவாலயத்தில் துணைப் பொதுச் செயலாளரான பொன்முடி இல்லை. அதே நேரம், விழுப்புரத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பாணாம்பட்டு பால்ராஜ் இல்ல திருமண விழாவில் தனது மனைவி விசாலாட்சியோடு கலந்து கொண்டிருக்கிறார் பொன்முடி.

விழுப்புரம், வானூர் ஆகிய இரு தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் இன்று மாலை 4 மணிக்கு விழுப்புரம் வருகிறார்.

அவரை வரவேற்க தற்போதைய விழுப்புரம் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் யாரும் செல்லக்கூடாது என பொன்முடி உத்தரவிட்டுள்ளார் என்கிறார்கள். அனைவரையும் வெளியூரோ டூரோ கிளம்புமாறு அறிவுறுத்தி இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள் திமுக வட்டாரங்களில்.  அதே நேரம் முதன் முதலாக  மாவட்டச் செயலாளர் ஆகி விழுப்புரம் வரும்போது பெரும் கூட்டத்தைத் திரட்ட சென்னையில் இருந்தபடியே கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் லட்சுமணன்.

“செஞ்சி ராமச்சந்திரன், ஏ ஜி சம்பத் ஆகியோரையே  விழுப்புரம் அரசியல்ல  எதிர்த்து வெற்றி பெற்றவர் பொன்முடி. இந்த லட்சுமணன் எல்லாம் எம்மாத்திரம்?” என பொன்முடி ஆதரவாளர்கள் உறுமி கொண்டிருக்கிறார்கள். ponmudi angry vizhupuram dmk blast

இதே நேரம் தனக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வந்ததை அடுத்து பொன்முடியின் இந்த ரியாக்‌ஷன்கள் பற்றி  துணை முதல்வர் உதயநிதி, சபரீசன் ஆகியோருடைய கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கிறார் லட்சுமணன்” என்கிறார்கள்.

விழுப்புரம் திமுக இப்போது பரபரப்பாக இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share