பொன்முடி, வளர்மதியின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

அரசியல்

அமைச்சர் பொன்முடி மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதியின் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் இன்று (ஜூன் 18) உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் பொன்முடி வழக்கு!

திமுக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கடந்த 1996-2001 திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது, தனது பதவியை முறைகேடாக பயன்படுத்தி ரூ.1.36 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், பொன்முடி மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் மற்றும் வேலூர் மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெற்றது. இந்நிலையில், 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது “போதுமான ஆதாரங்கள் இல்லை” எனக்கூறி அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தாமாக முன்வந்து மறு ஆய்விற்கு எடுத்தார். மேலும், “அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை முறையாக நடைபெறவில்லை” எனக் குற்றம்சாட்டினார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தை நாடினார். ஆனால், உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முறைப்படி சந்திக்குமாறு பொன்முடிக்கு அறிவுறுத்தியது.

இந்நிலையில், நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் மதுரை நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால், வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், நீதிபதி கடந்த ஜனவரி மாதம் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் திரும்பியதும், பொன்முடி மீதான வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

ஜனவரி மாதத்திற்கு பிறகு பலமுறை பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு முன்பு, ஏப்ரல் மாதம் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பொன்முடி மீதான இந்த மறு ஆய்வு வழக்கில் ஜூன் 18 – 21ஆம் தேதி வரை விசாரணை நடைபெறும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உறுதியளித்தார்.

வழக்கு ஒத்திவைப்பு

இந்நிலையில், இன்று (ஜூன் 18) சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஏற்கனவே அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மீதான வழக்குகள் நடைபெற்று வருவதால், பொன்முடி மீதான இந்த வழக்கை ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

முன்னாள் அமைச்சர் வளர்மதி வழக்கு!

கடந்த 2001-2006 அதிமுக ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வளர்மதியை விடுவித்து 2012ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தாமாக முன் வந்து வளர்மதி மீதான வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் வளர்மதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இடைக்கால தடைக்கு பின்னர் இன்று (ஜூன் 18) சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வளர்மதிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் மீதான விசாரணையை செப்டம்பர் மாதம் 2 ஆம் வாரத்திற்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”சொந்த மாநில மக்களை அகதிகளாக்கும் தமிழக அரசு” : டிடிவி தினகரன் கண்டனம்!

Stock Market : புதிய உச்சம் தொட்ட ஏர்டெல், மஹிந்திரா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *