புதுச்சேரி மாநிலத்தில் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் தொடங்கியது.
புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குறிப்பிட்ட சில தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கூட்டம் மார்ச் 9 ஆம் தேதியான இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைமுன்னிட்டு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை சட்டசபைக்கு வருகை தந்தார். அவருக்கு காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து சட்டசபையின் மைய மண்டபத்திற்கு வந்த துணைநிலை ஆளுநர் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். அப்போது, ரங்கசாமி ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ நேரு “மத்திய அரசே, மத்திய அரசே புதுச்சேரிக்கு நிரந்தர ஆளுநர் வேண்டும். வேண்டாம் வேண்டாம் புதுச்சேரிக்கு இரவல் ஆளுநர் வேண்டாம்” என்று எழுதப்பட்டிருந்த பதாகையுடன் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”புதுச்சேரிக்கு ஆளுநராக உள்ள தமிழிசை எப்போது புதுச்சேரிக்கு வருகிறார், எப்போது போகிறார் என்பதே தெரியவில்லை. தேவைப்படும் நேரத்தில் மக்களால் அவரை சந்திக்கக் கூட முடியவில்லை.
ஆளுநர் மாளிகையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்துகிறார். ஆனால் இதுவரை எந்த குறையையும் அவர் தீர்த்து வைக்கவில்லை. சமீபத்தில் 13 மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆளுநர்களை நியமித்தது. ஆனால் புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணித்துள்ளது.
சுற்றுலா தலமாக இருக்கும் புதுச்சேரியில் பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு இல்லை” என்றார்
சுயேச்சை எம்.எல்.ஏ வெளிநடப்பு செய்ததால் புதுச்சேரி சட்டப்பேரவையில் சிறிது பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மார்ச் 13 ஆம் தேதி 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளார். இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம் முழுவதும் நடைபெற வாய்ப்புள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு ஆலோசித்து முடிவு எடுக்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து, மின்துறை தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
மோனிஷா
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: பாஜகவுக்கு எதிரான குரல்கள்?
IND VS AUS: 4வது டெஸ்ட்…நேரில் கண்டு ரசித்த பிரதமர்கள்!