பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து புதுச்சேரியில் அதிமுகவினர் இன்று (ஜூன் 12) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் 1991-1996 வரையிலான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலம் குறித்தும் தற்போதைய அதிமுக – பாஜக கூட்டணி குறித்தும் பேசியிருந்தார்.
அண்ணாமலையின் பேச்சு இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்ததோடு,
“கத்துக்குட்டி அண்ணாமலைக்கு வரலாறு தெரியாது. அவர் கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவை விமர்சனம் செய்து வருகிறார்.
அதிமுக – பாஜக கூட்டணி தொடரக்கூடாது. மோடி பிரதமராக வரக்கூடாது என்ற அடிப்படையில் அண்ணாமலை பேசி வருகிறார்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரி அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையை கண்டித்து இன்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் உப்பளம் பகுதியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் சிலையின் முன்பு மாநிலச் செயலாளர் அன்பழகன் முன்னிலையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் அதிமுகவின் கொடியை கையில் ஏந்தி அண்ணாமலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன், “அண்ணாமலை தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளை விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. அவரை திரும்ப பெறுவதற்கு பாஜக தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணியில் குழப்பம் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையே விமர்சனம் செய்திருப்பதைப் பார்த்தால், பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டுமா என்று தோன்றுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலைமையில் அண்ணாமலையில் செயல்பாடுகள் திமுகவிற்கு சாதகமாக அமையும்.
நாளை கட்சித் தலைமையை சந்தித்து அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற புகார் அளிக்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா
மருத்துவ பொது கலந்தாய்வு: மத்திய அமைச்சரை சந்திக்கும் மா.சுப்பிரமணியன்
ராஜேஷ்தாஸ் வழக்கு: தீர்ப்பு தேதியை அறிவித்த நீதிமன்றம்!