அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கோவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தது அரசியல் அரங்கில் பேசு பொருளானது. ஆனால் இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகக் கோவை வந்துள்ளார். கொடிசியா வளாகத்தில் நடந்த கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மாநில அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான அமுல் கந்தசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டணி முறிவைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த அமைச்சரை அதிமுகவினர் சந்திப்பதால் இந்த விவகாரம் பேசு பொருளானது.
இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், “இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை. எனது தொகுதியில் பிரதான தொழில் விவசாயம். அதனால் தென்னை விவசாயிகளின் கோரிக்கையைச் சொல்வதற்காக வந்தேன்.
கூட்டணிக்கும் இந்த சந்திப்புக்கும் தொடர்பு இல்லை. ஏ.கே.செல்வராஜ் தனது ஊரில் ஒரு வங்கி வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க வந்தார்.
அமுல் கந்தசாமி கல்விக் கடன் விவகாரம் தொடர்பாகக் கோரிக்கை வைக்க வந்தார்.
நிதியமைச்சராக இருப்பதால் மரியாதை நிமித்தமாக நிர்மலா சீதாராமனை மேடையில் அம்மா என்று சொன்னேன். ஆனால் எங்களுக்கு ஒரே அம்மா என்றால் அது ஜெயலலிதா தான். இவரை யாரோடும் ஒப்பிட முடியாது.
கூட்டணி விவகாரம் எதுவாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிதான் முடிவெடுப்பார்” என்றார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எடப்பாடியை சந்தித்த தமிமுன் அன்சாரி : பேசியது என்ன?
”ஒன் 2 ஒன்”: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!