வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் என யாருக்கும் காத்திருக்காமல் தனது செய்தியை டைப் செய்யத் தொடங்கியது.
‘பாஜக ஆளுங்கட்சியாக வந்ததில் இருந்து ஆளுநர்கள், பாஜகவின் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசியல் செய்து வருகிறார்கள் என்ற புகார் பொதுவாகவே இருந்து வருகிறது.
கடந்த கால காங்கிரஸ் ஆட்சிகளிலும் ஆளுநர்கள் மீது அரசியல் புகார்கள் இருந்தபோதும், தற்போதைய மோடி ஆட்சியில் பாஜகவின் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் இணை ஆட்சி அல்லது ஏட்டிக்கு போட்டி ஆட்சி நடைபெற்று வருவதாக பல சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.
தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி மீது கூட அந்த புகார் உண்டு. ஆனால் இரு ஆளுநர்கள் இடையிலேயே அரசியல் ரீதியான உரசல்கள் நடக்கின்றன என்பது புதிய செய்தியாக இருக்கிறது.
கடந்த ஆகஸ்டு 10 ஆம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் ஆரோவில் ஃபவுண்டேஷன் சார்பில் ஸ்ரீ அரவிந்தரின் 150 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள், 75 ஆவது சுதந்திர தின விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
ஆரோவில் ஃபவுண்டேஷனுக்கு தமிழக ஆளுநர்தான் தலைவராக இருக்கிறார். புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், ஆரோவில் சார்ந்த ஒருவரும் அந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
அந்த வகையில் அறக்கட்டளையின் தலைவரான தமிழக ஆளுநர், உறுப்பினரான புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை, ஆரோவில் சார்ந்த உறுப்பினர் ஜெயந்தி ஐ.ஏ.எஸ். ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
விழாவில் அரவிந்தரின் அன்பு, யாரிடமும் பகைமை பாராட்டாத குணம், யாரிடமும் காழ்ப்புணர்ச்சி காட்டக் கூடாது என்ற போதனைகள் உள்ளிட்டவற்றைப் பற்றி அந்த விழாவில் தமிழக ஆளுநர் ரவி பேசினார்.
இந்த நிகழ்வு பற்றி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ’ராஜ்பவன் தமிழ்நாடு’ ட்விட்டர் பக்கத்தில் ஆகஸ்டு 10 ஆம் தேதி இரவு 9.37 மணிக்கு பதிவிடப்பட்டது.
“சென்னை ,ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீஅரவிந்தரின் 150வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் உலகில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக ஸ்ரீஅரவிந்தர் போதனைகளின் பொருத்தத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு இணைக்கப்பட்ட புகைப்படத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவது போன்ற படம் இருக்கிறது. ஆனால் அந்த புகைப்படத்தில் தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசையின் படம் இடம்பெறவில்லை. தமிழக ராஜ்பவனின் இந்த ட்விட்டர் பதிவில் பிரதமர் அலுவலகம் மட்டுமே டேக் செய்யப்பட்டிருக்கிறது. தமிழிசை டேக் செய்யப்படவில்லை.
இந்த நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்களை தமிழிசையின் ட்விட்டரில் பதிவு செய்வதற்காக தெலங்கானா ஆளுநர் மாளிகை, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை ஆகியவற்றில் இருந்து தமிழக ஆளுநர் மாளிகை அதிகாரிகளிடம் கேட்டும் உரிய புகைப்படங்கள் உடனடியாக அனுப்பப்படவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக தமிழிசை சௌந்தராஜன் இந்த நிகழ்ச்சி பற்றி அன்று இரவு 11.37 மணிக்குத்தான் ட்விட்டரில் பதிவிட்டார். அதுவும் தமிழிசை சௌந்தராஜன் பேசிய படம் செல்போனில் இருந்து எடுக்கப்பட்ட படமாக இருந்தது. மேலும் மேடையில் ஆர்.என்.ரவி., தமிழிசை ஆகியோர் இருக்கும் படத்தையும், பார்வையாளர் படத்தையும் தமிழிசை பதிவிட்டார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி பற்றிய புகைப்படத்தை பெறுவதற்கு கூட தெலங்கானா ஆளுநர் மாளிகை சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியது பற்றி உயர் மட்ட அதிகாரிகள் வட்டாரத்தில் வியப்பு கலந்த வேதனை தெரிவிக்கப்படுகிறது.
தமிழக ஆளுநர் மாளிகையின் சில அதிகாரிகள் செய்யும் இந்த சேட்டைகள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தெரிந்து நடக்கிறதா தெரியாமல் நடக்கிறதா என்றும் உயர் மட்ட வட்டாரத்தில் வியப்போடு பேசப்படுகிறது.
அதேநேரம் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சி பற்றி ராஜ்பவன் பின்னர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் என்று குறிப்பிட்டதோடு, தமிழிசை கலந்துகொண்ட படமும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை தமிழ்நாட்டில் அடிக்கடி பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அதே அளவு நிகழ்ச்சிகளில் தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களிலும் கலந்துகொண்டு ஆக்டிவ் ஆக இருக்கிறார்.
ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதுபோல மக்களோடு மக்களாக ஆளுநர் தமிழிசை இருக்கிறார். ராஜ்பவனை பிரஜா பவனாக மாற்றியிருக்கிறார். இதை பாஜகவிலேயே கூட சிலரும், உயர் அதிகாரிகளிலேயே சிலரும் ரசிக்கவில்லை.
அதனால்தான் ஒரு போட்டோவுக்காக தமிழக ஆளுநர் மாளிகையில் இந்த தாமதம் நடந்திருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தமிழக ஆளுநர் மாளிகையை மையமாக வைத்து சமீபமாக அரசியல் விமர்சனங்கள் அதிகமாக எழுந்து வருகின்றன.
ஆனால் இன்னொரு ஆளுநரோடு செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த அரசியல் விசித்திரமானது என்கிறார்கள் உயர் மட்ட வட்டாரங்களில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
விஜிலன்ஸ் ரெய்டு: கே.பி.பி பாஸ்கர் வீட்டில் சிக்கியது எவ்வளவு?