’பேரிழப்பு’ : மனோபாலாவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்!

அரசியல்

மறைந்த நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான மானோபாலாவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்ட மனோபாலா இன்று (மே 3) காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

மறைந்த மனோபாலா இயக்கத்தில் சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நான் நடித்துள்ளேன். அன்பு நண்பர் மனோபாலா பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், சிறந்த பண்பாளர். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது.

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

மநீம தலைவர் கமல்ஹாசன்

இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கி, இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் துணை இயக்குநராக இணைந்து, திரைப்பட இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் மிகச் சிறப்பாக திரைப்படத் துறையில் பங்காற்றிய மனோபாலா காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

20 திரைப்படங்கள், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கி, ஏறத்தாழ 175 திரைப்படங்களில் நடித்துள்ள மனோபாலா மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

காலத்தால் அழியாத கலைப்படைப்புகளைத் தந்த திரைப்பட இயக்குநரும், தனது நகைச்சுவை ததும்பும் நடிப்பால் மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகருமான என் பேரன்புக்குரிய அண்ணன் மனோபாலா மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

பாரதிராஜாவின் பாசறையிலிருந்து வந்தாலும் தனக்கென தனித்துவமான பாணியை வகுத்துக்கொண்ட வெற்றிகரமான இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்று பன்முகத்திறன் கொண்ட படைப்பாளியாகத் திகழ்ந்த அவருடைய இழப்பென்பது தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

மனோபாலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

பிரபல திரைப்பட நடிகரும், இயக்குநருமான மனோபாலா உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்; அவரது குடும்பத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

பிரபல திரைப்பட இயக்குனரும், சிறந்த நடிகருமான மனோபாலா காலமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்; அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

பாமக தலைவர் அண்புமணி ராமதாஸ்

தமிழ்திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார் என்பதை அறிந்து வருத்தம் அடைந்தேன்; அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், நண்பர்கள், தமிழ்த்திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கல்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

உதவி இயக்குநராக திரையுலகில் கால் பதித்து, தற்போதைய தலைமுறை நடிகர்களுக்கு இணையாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் திறம்பட நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவர். மனோபாலா மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்.

மனோபாலா மறைவால் வாடும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், சக திரை கலைஞர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பிரியா

மனோபாலா மறைவு அதிமுகவுக்கு இழப்பு : ஈபிஎஸ்

மனோபாலா பாராட்டியது நெஞ்சில் நிழலாடுகிறது: முதல்வர் உருக்கம்!

Political leaders condoles Manobala
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *