ஆளுநரிடம் அரசியல் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஆகஸ்ட் 8) ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் அரசியல் பேசியதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாத பொருளானது.
இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 9) தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? இனியும் பொறுப்போமா?… தமிழ்நாடு ஆளுநரை ரஜினிகாந்த் சந்தித்துப் பேசி உள்ளார்.
மரியாதை நிமித்தமாக ஆளுநரைச் சந்திப்பது ஏற்புடையதே. ஆனால் அதன் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்து ‘தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்குப் பகிர்ந்து கொள்ள முடியாது’ எனவும் ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளது.
ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல.
ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாகச் செயல்படவும் கூடாது. அப்படி இருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலைப் பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது.
இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில், ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகை மாறி, கண்டனத்திற்கு ஆளானது.
இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது.
இது தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது. தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரியா
டிஜிட்டல் திண்ணை: ஆளுநர்-ரஜினி சந்திப்பு: மோடியின் மெசேஜ் என்ன?