திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் ரூ.51 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை நேற்று (டிசம்பர் 1) லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திலும் அங்கித் திவாரி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். நேற்று இரவு தொடங்கிய சோதனை இன்று காலை 7 மணியளவில் தான் நிறைவு பெற்றது.
இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சபாநாயகர் அப்பாவு
அமலாக்கத்துறையின் இடைத்தரகர்கள் கடந்த 3 மாதங்களுக்கு என்னையும் தொடர்பு கொண்டு மிரட்டினர். தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சரியான நபரை கைது செய்துள்ளனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளில் இதற்கு முன்பும் டெல்லி, ராஜஸ்தான், மேற்குவங்கத்தில் லஞ்சம் வாங்கியதாக அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மனிதன் தவறு செய்ததற்காக மொத்த அமலாக்கத்துறையையும் மோசம் என்று கூற முடியாது. தமிழக காவல்துறையில் யாரோ ஒருவர் தவறு செய்ததற்காக தமிழக காவல்துறையே மோசம் என்று கூறிவிட முடியாது. தவறு செய்வது மனிதனின் இயல்பு.
அமலாக்கத்துறையில் தவறு செய்த அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக அமலாக்கத்துறை என்பதால் இன்னும் நடவடிக்கை கடுமையாக இருக்க வேண்டும்.
தமிழக காவல்துறை இதனை ப்ரொபஷனலாக அணுக வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறைக்குக் கைது செய்ய முழு அதிகாரம் இருக்கிறது. இதை அரசியலாக பார்க்க வேண்டாம். தமிழக அரசியல்வாதிகளுக்கு இது புரியாது. இங்கு மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகள் தான் உள்ளனர். இது தமிழகத்தின் சாபக்கேடு.
தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன்
அந்த ஒரு நபருக்காக அந்த துறையே மோசமானது, எல்லாருமே லஞ்சம் வாங்குவார்கள் என்று கூறி மத்திய அரசின் ஏஜென்சியில் மாநில அரசின் ஏஜென்சி சோதனை செய்தே தீருவேன் என்று செய்கிறது.
ஒருத்தர் தவறு செய்தால் எல்லாருமே தவறு செய்வார்கள் என்றால், ஒரு அமைச்சர் வீட்டில் சோதனை செய்தார்கள் என்றால் அனைத்து அமைச்சர்கள் வீட்டிலும் சோதனை செய்ய வேண்டும். ஒரு தவறான முன் உதாரணத்தை தமிழ்நாடு எடுத்து சென்று கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்
அமலாக்கத்துறையினர், சம்பந்தமே இல்லாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியோ அல்லது சம்மன் அனுப்பியோ அவர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்குகிறார்கள். அதனால், பல தொழிலதிபர்கள் வேறு வழியின்றி லஞ்சத்தை கொடுக்கிறார்கள். எனவே, இது அவர்களுடைய வாடிக்கையான நடவடிக்கை தான். அங்கித் திவாரி போல் அங்கு நூற்றுக்கணக்கான அதிகாரிகள் இருக்கிறார்கள். அதனால், இந்த அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு செய்துள்ளனர். இது அவசியமான நடவடிக்கை.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா
தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்ச ஒழிப்புத் துறையினால் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
‘தொடையில் உள்ள புண் நடையில் காட்டும்’ என்று பழமொழி உள்ளது. அதைப்போலக் கடந்த மாதம் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் அமலாக்கத்துறையில் பணிபுரிந்த நாவல்கிஷோர் மீனா என்பவர் 15 லட்சம் லஞ்சம் பெற்றதாக ராஜஸ்தான் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்யப்பட்டு இருப்பதும் கவனிக்கத்தக்கது.
லஞ்ச ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் அமலாக்கத்துறை ஒன்றிய அரசின் ஏவல்துறையாக மட்டுமே இருப்பது நகைப்புக்குரியது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
புரோ கபடி லீக் இன்று தொடக்கம்…கோப்பையை தட்டி தூக்குமா தமிழ் தலைவாஸ்?
புயல் முன்னெச்சரிக்கை: திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!