Political leaders mourned for bavatarini death

’பவதாரிணி மறைவு… இசையுலகிற்கு இழப்பு’ : அரசியல் தலைவர்கள் இரங்கல்!

அரசியல்

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கொழும்பு லங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஜனவரி 25) காலமானார். அவருக்கு வயது 47.

இதனையடுத்து அவரது உடலை சென்னை கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பவதாரிணியின் திடீர் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணி அவர்களின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி அவர்கள், தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே இரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர் ஆவார். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது. பாரதி திரைப்படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றவர். இசையமைப்பாளராகவும் பல படங்களுக்குப் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணி அவர்களின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும்.

தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானி அவர்களுக்கும், பவதாரணி அவர்களின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

இசைஞானி இளையராஜா அவர்களின் புதல்வியும் இசையமைப்பாளருமான பவதாரிணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மருத்துவர் அய்யா அவர்களின் விருப்பப்படி தயாரிக்கப்பட்ட இலக்கணம் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தவர் அவர். அவரை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர்

பிரபல பின்னணி பாடகியும், இசைஞானி அவர்களின் அன்பு மகளுமான பவதாரிணி அவர்களின் அகால மரணம் பேரதிர்ச்சியை அளிக்கிறது. தனது அன்பு மகளை இழந்து துடிக்கும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், அன்புக்குரிய சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், இசையுலகத்தவர்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஆற்றொண்ணா துயரம்! 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

சிறந்த பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், இசைஞானி இளையராஜா அவர்களது புதல்வியுமான பவதாரணி அவர்கள், உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தனது தனிச் சிறப்பான குரலால், இதயத்தை நெகிழச் செய்யும் பல பாடல்களைப் பாடியவர் பவதாரணி. இளம் வயதிலேயே தேசிய விருது வென்ற பவதாரணி அவர்கள் இசையுலகில் பல சாதனைகள் படைப்பார் என்று அனைவரும் விரும்பியிருந்த போது, அவரது எதிர்பாராத மறைவு சற்றும் ஏற்க முடியாததாக இருக்கிறது. பவதாரணி அவர்களைப் பிரிந்து வாடும் இசைஞானி இளையராஜா குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தக் கடினமான நேரத்தில் அவர்களுக்கு இறைவன் துணையிருக்கட்டும். ஓம் சாந்தி!

சசிகலா

இசைஞானி இளையராஜா அவர்களின் மகள் பவதாரிணி அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். இசை உலகில் பவதாரிணி அவர்களின் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.

தனது தந்தையை போன்று இசைஞானம் கொண்ட பவதாரிணி அவர்கள் தமிழ் திரைப்படங்களில் சிறப்பான பல பாடல்களை பாடியிருக்கிறார். அதேபோன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில், திரைப்படங்களுக்கு இசையமைத்தும், தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். ‘பாரதி’ படத்தில் அவர் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ பாடலுக்கு, தேசிய விருது பெற்று, அவரது தந்தைக்கும் பெருமை சேர்த்தவர்.

பவதாரிணி அவர்களை இழந்து வாடும் அவரது தந்தை இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், அவரது சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் இசையுலக ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

இசையில் தனது தந்தையை போலவே பிரபலமான பவதாரிணி, பாரதி படத்தில் இடம் பெற்ற ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலை பாடியதற்காக தேசிய விருது பெற்றார்.

அவர், ’மேகத்தின் மேலே உன்னோடு’, ’என்னை தாலாட்ட வருவாளா’, ’இது சங்கீத திருநாளோ’, ’ஒளியிலே தெரியுது தேவதையா’, ’தாலியே தேவ இல்ல’, ’ஆத்தாடி ஆத்தாடி’, ’நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை’ போன்ற பல அழகிய பாடல்களை பாடியுள்ளார்.  மேலும் 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஐசிசி விருது: டிவில்லியர்ஸ் வாழ்நாள் சாதனையை முறியடித்த கோலி

‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ : இளையராஜா மகள் பவதாரிணி காலமானார்!

டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை நோக்கி பாயத் தயாராகும் ED

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *