டிஐஜி தற்கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை சரக டிஐஜியாக பணிபுரிந்து வந்த விஜயகுமார் இன்று (ஜூலை 7) கோவை ரேஸ் கோர்ஸ் முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவு தமிழ்நாடு காவல்துறையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிஐஜி விஜயகுமாரின் மறைவிற்கு உடன் பணிபுரிந்தவர்கள், காவல்துறையினர், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டிஐஜி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “காலையில் வழக்கமான நடைப்பயிற்சி முடித்து வந்த விஜயகுமார் தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன, இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
ஆகவே விஜயகுமார் ஐபிஎஸ் தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டுமென அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “குடும்ப சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், தனது வீட்டில் பணியிலிருந்த காவலரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தியினைப் பார்க்கும்போது, பணிச்சுமையும், மன உளைச்சலும் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் நிலவுகிறது.
இது குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிடவும், காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி அவர்களது பணிச்சுமையை குறைக்கவும், அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஓய்வு பெற்ற நீதியரசர் சி.டி. செல்வம் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை என்ன ஆனது?
காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க, தமிழக காவல்துறையில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் தற்கொலை என்பது அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்த தற்கொலைக்கு பின்னணி என்ன என்று, தமிழக அரசு, தீவிர விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், “டிஐஜி விஜயகுமார் தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கான காரணம் குறித்து அறிய சிபிஐ விசாரணைக்குத் தமிழ்நாடு முதல்வர் உத்தரவிடவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
’டியர் அம்பேத்கர்னு தான் கூப்பிடுவார்’: டிஐஜி மறைவால் உருகிய இன்ஸ்பெக்டர்
சொந்த ஊரில் டிஐஜி விஜயகுமார் உடல்: அமைச்சர், டிஜிபி நேரில் அஞ்சலி!