தேமுதிக அலுவலகத்தில் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ளது.
தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான விஜயகாந்த் தனது 71 வயதில் இன்று காலை காலமானார்.
சென்னை மியாட் மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. காலை 10 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறினார்.
முதல்வர் வந்து சென்ற பிறகு 10.30 மணியளவில், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு விஜயகாந்த் உடலை எடுத்துச் செல்ல வாகனம் புறப்பட்டது.
அதில் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் வந்தனர். சாலிகிராமத்தில் இருந்து கோயம்பேடு செல்வதற்கான தொலைவு 4கிமீ தான். வழக்கமாக இந்த தூரத்தை 15 நிமிடங்களில் கடந்துவிடலாம்.
ஆனால் இன்று விஜயகாந்தின் உடல் எடுத்து வரப்பட்ட வாகனம் கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தை அடைவதற்கு சுமார் 3 மணி நேரம் ஆனது. 10.30 மணிக்கு புறப்பட்ட வாகனம், 1.30 மணிக்கு தொண்டர்களின் வெள்ளத்தில் ஊர்ந்து வந்தடைந்தது.
இந்த வாகனத்துக்கு இருபுறமும், முன்னும் பின்னும் ஏராளமான விஜயகாந்த் ஆதரவாளர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் பொதுமக்கள் நடந்து வந்தனர்.
அதுபோன்று விஜயகாந்த் மகன்களான சண்முக பாண்டியன், விஜய பிரபாகரனும் தந்தையின் இறுதி ஊர்வலத்தில் வாகனங்களுக்கு முன் நடந்து வந்தனர். அப்போது பொதுமக்கள், பெண்கள் என பலரும் விஜயகாந்தின் மகன்களை சந்தித்து, அவர்களின் கையை பிடித்து ஆறுதல் கூறினர்.
விஜயகாந்த் உடல் கட்சி அலுவலகத்துக்கு வருவதற்கு முன்னதாகவே, ஏராளமான தொண்டர்களும் அங்கு குவிந்திருந்தனர். காமெடி நடிகர் கவுண்டமணி, நடிகரும், இயக்குநருமான லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் ஆகியோரும் வந்திருந்தனர்.
இந்நிலையில் 1.30 மணிக்கு தேமுதிக அலுவலகத்தில் விஜய்காந்த் உடல் வைக்கப்பட்டது, அவரை பார்த்து பிரேமலதா விஜயகாந்த் தனது மகன்களை அணைத்துக்கொண்டு அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது.
தொடர்ந்து, கவுண்டமணி, டி.ஆர்.ராஜேந்தர், கவிஞர் வைரமுத்து, திருநாவுகரசர் எம்.பி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி சண்முகம் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர்.
அவர்களை தொடர்ந்து தயாநிதிமாறன் எம்.பி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.க.தலைவர் கி.வீரமணி, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, சசிகலா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து பலரும் வந்து கொண்டிருக்கும் நிலையில், கட்டுக்கடங்காத கூட்டம் தேமுதிக அலுவலகத்தில் கூடியுள்ளது. அவர்களை போலீசார் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…