மணிப்பூரில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல்: தலைவர்கள் கண்டனம்!

அரசியல் இந்தியா

மணிப்பூருக்கு இன்று (ஜூன் 29) சென்ற ராகுல்காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தியதை அடுத்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பாஜக ஆளும் மணிப்பூரில் கலவரம் தொடர்ந்து வருகிறது. இதில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பதற்காக மணிப்பூருக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.

அதன்படி இன்று காலை மணிப்பூர் தலைநகர் இம்பால் விமான நிலையத்தை சென்றடைந்தார் ராகுல்காந்தி. தொடர்ந்து அங்கிருந்து மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான சுராசந்த்பூர் மாவட்டத்திற்குச் சென்றபோது ராகுல் காந்தியின் கான்வாய் பிஷ்ணுபூர் பகுதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்கவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற சென்ற ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது காங்கிரஸ் மற்றும் பல்வேறு எதிர்கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அமைதியின் மீது வெறுப்பு

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி சந்திக்க சென்றுள்ளார். அவரை வழியிலேயே பாஜக அரசு தடுத்து நிறுத்தியுள்ளது.

அமைதி, அன்பு, சகோதரத்துவம் ஆகியவற்றின் மீது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு கடும் வெறுப்பைக் கொண்டுள்ளது.

ஆனால் இந்த நாடு காந்தியின் பாதையிலும், அன்பின் பாதையிலுமே எப்போதும் செல்லும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

ஜனநாயக நெறிமுறைகளை சிதைக்கும் பாஜக

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “மணிப்பூரில் ராகுல் காந்தி சென்றகான்வாய் பிஷ்ணுபூர் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

அங்கு, நிவாரண முகாம்களில் வாடும் மக்களை சந்தித்து, கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க உள்ளார். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி மெளனம் காக்கிறார்.

இப்போது மத்திய மற்றும் மாநில அரசும் சேர்ந்து எதேச்சதிகார முறைகளைப் பயன்படுத்தி, ராகுல் காந்தியின் இரக்க உணர்வைத் தடுக்கின்றன. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் அனைத்து அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக நெறிமுறைகளையும் பாஜக சிதைக்கிறது. மணிப்பூருக்கு அமைதி தேவை, மோதல் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியை ஏன் நிறுத்த வேண்டும்?

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், “பாரத் ஜோடோ யாத்திரை பயணத்தை தொடர்ந்து தற்போது கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு ராகுல் காந்தி 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மௌனமாகவோ அல்லது செயலற்று இருப்பது அவரது முடிவாக இருக்கலாம். ஆனால் மணிப்பூரி சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் ஆறுதல் வழங்கும் ராகுல் காந்தியின் முயற்சிகளை ஏன் நிறுத்த வேண்டும்? “ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எதேச்சதிகாரர்களின் பழிவாங்கும் நடவடிக்கை

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின், “ வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு அவர் செல்லும் வழியில், முக்கியமான மணிப்பூர் கலவர பிரச்சினையில் பிரதமர் வாய்மூடி மௌனமாக இருக்கும் நிலையில், மணிப்பூர் மக்களின் துயரை காது கொடுத்து கேட்க ராகுல் காந்தி முயற்சிக்கிறார். ஆனால் அவரை காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளது.

அங்கு அமைதியை மீட்டெடுப்பதே இப்போது முதன்மையானதாக இருக்க வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான எதேச்சதிகாரர்களின் இத்தகைய பழிவாங்கும் அரசியல் நடவடிக்கைகள் அபத்தமானது மற்றும் கண்டிக்கத்தக்கது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *