விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி மாலை தொடங்கி, ஆகஸ்ட் 17 அதிகாலை வரை சென்னை காமராஜர் அரங்கத்தில் திருமாவளவனின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு மேடையில் இருந்த திருமாவுக்கு வாழ்த்து சொல்வதற்காக கூட்டத்தினர் மேடையேறினர்.
கட்சி நிர்வாகிகள் முற்றுகையில் திருமாவளவன் திக்குமுக்காடிப்போனார். அப்போது, “திருமாவுக்கு ஸ்பெஷல் போலீஸ் பாதுகாப்பு கொடுத்தா இதெல்லாம் நடக்குமா?” என்று அங்கிருந்த விசிக நிர்வாகிகள் புலம்பிக் கொட்டினார்கள்.
இதுதொடர்பாக திருமா உயிருக்கு குறி… பாதுகாப்பு கொடுக்க அரசு மறுப்பா என்ற தலைப்பில் மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி நாம் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதற்கிடையில்… ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்த திருமாவளவன், தனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வருவதாகவும் முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.
முதல்வரிடம் நேருக்கு நேராக தெரிவித்துவிட்ட பிறகும் திருமாவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்ற வருத்தம் சிறுத்தை நிர்வாகிகளுக்கு இருந்தது.
இந்தநிலையில், திருமாவுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசிக வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது,
“ஏற்கனவே திருமாவளவனுக்கு ஒரு பிஎஸ்ஓ தனிப்பாதுகாவலர் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், உளவுத்துறை கொடுத்த வார்னிங் அடிப்படையில், ஏட்டு அல்லது எஸ்ஐ அந்தஸ்தில் உள்ள ஒரு கூடுதல் பிஎஸ்ஓ மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோர் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் டூவீலரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருமாவளவன் இன்று ஈரோட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அவருக்கு ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் இருந்து ஒரு போலீஸ் வாகனம் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளது” என்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“இளைஞர்கள் அரசியலுக்கு வர விரும்புகிறார்கள்” – மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பேச்சு!
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்… தமிழகத்தில் எப்போது? – அன்புமணி கேள்வி!