அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் இன்று (மார்ச் 18) நடைபெறவுள்ள நிலையில் அதிமுக அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் பொதுக்குழு செல்லும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 26-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கவுள்ளது. தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் நாளை (மார்ச் 19) மாலை 3 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
மார்ச் 21-ஆம் தேதி மாலை 3 மணிக்குள் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 26-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, அடுத்த நாளே (மார்ச் 27) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதனிடையே இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளதால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி 50 போலீசார் இரவு பகலாக சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கோரி அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதால், கூடுதலாக 100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் நடைபெற்ற பொதுக்குழுவின் போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களுக்கு இடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் கலவரம் ஏற்பட்டது. அதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
அதிகாலையில் பெய்த மழை: வெப்ப அலை குறைவால் மக்கள் மகிழ்ச்சி!
மேஜர் ஜெயந்த் மரணம்: அரசு சார்பில் அஞ்சலி!