ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் நெல்லை எக்ஸ்பிரசில் 4 கோடி ரூபாய் பிடிபட்டதும், திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு அந்த பணத்தை எடுத்துச் செல்வதாக பிடிபட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்ததும் தமிழ்நாட்டையே ஒரு வாரமாக பரபரப்புக்கு உள்ளாக்கியது.
சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு பணம் எடுத்துச் செல்கிறார்கள் என்ற தகவல் முதலில் சென்னை மாநகர உளவுத்துறைக்கும், மாநில உளவுத்துறைக்கும் வந்திருக்கிறது. அதன் அடிப்படையில் சோதனை நடத்தியதில் தான் 4 கோடி ரூபாயை திருநெல்வேலிக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்த நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேரை தாம்பரத்தில் ரயிலிலேயே வைத்துப் பிடித்தனர் தேர்தல் பறக்கும் படையினர்.
ரயிலில் பிடித்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்துவிட்டு, இந்த மூன்று பேர் மீதும் தாம்பரம் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது. அவர்கள் மூவரையும் தாம்பரம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர் பறக்கும் படை அதிகாரிகள்.
தாம்பரம் காவல்துறையினர் இந்த மூன்று பேரையும் வைத்து விசாரணை நடத்தியதில் பல அதிர வைக்கும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. இந்த பணத்தை எங்கிருந்து எடுத்து வந்தீங்க, அந்த இடத்தைக் காட்டுங்க என்று சொல்லி அவர்களை வாகனத்தில் அழைத்துச் சென்றனர் காவல்துறையினர். நேராக சென்னையில் கிரீன்வேஸ் சாலையை நோக்கி வழியைக் காட்டியிருக்கிறார்கள் மூவரும். உடனே காவல்துறையினர், இது அமைச்சர்களின் வீடுகள் இருக்கும் பகுதியாச்சே என்று ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள். நேராக அமைச்சர் உதயநிதியின் வீட்டிற்கு முன்பாக வண்டியை நிறுத்தியிருக்கிறார்கள். காவல்துறையினர் ஒரு நிமிடம் அதிர்ச்சியாக, உதயநிதியின் வீட்டிற்கு எதிரில் உள்ள பெரிய கட்டிடத்தைக் கைகாட்டி இங்கிருந்துதான் பணத்தை எடுத்து வந்தோம் என்று சொல்லியுள்ளனர்.
அவர்கள் அடையாளம் காட்டிய கட்டிடத்தில் நேற்று (ஏப்ரல் 12) தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அமல்ராஜ் உத்தரவோடு தாம்பரம் காவல்துறையினரும், அபிராமபுரம் காவல்துறையினரும் இணைந்து சோதனையை நடத்தி அங்கு இருக்கும் சிசிடிவி footageகளை எடுத்துள்ளனர். மேலும் அந்த கட்டிடத்திற்கு அருகிலுள்ள வீடுகளிலிருந்தும் சிசிடிவி footageகளை எடுத்துள்ளனர். 4 மாடிகளைக் கொண்ட அந்த கட்டிடத்தில் 3 மாடிகளில் கொரியன் ரெஸ்டாரண்ட்கள் இருக்கின்றன. 4 வது மாடியில் பலரும் உட்கார்ந்து பேசும் வகையில் ஒரு ஆஃபிஸ் இருக்கிறது. அந்த அலுவலகத்திலிருந்துதான் பணம் எங்களுக்கு கொடுக்கப்பட்டது என்று சொல்லியிருக்கிறார்கள்.
பணத்தை எடுத்துச் சென்ற மூன்று பேரையும் நோக்கி காவல்துறை அதிகாரிகள், “உங்களிடம் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது, கொடுக்கும்போது யாரெல்லாம் இருந்தாங்க” என்று கேட்டதற்கு அவர்கள் பல அடையாளங்களை சொல்லியிருக்கிறார்கள்.
சிலரின் புகைப்படங்களை அதிகாரிகள் அவர்களிடம் காட்டி பணம் கொடுக்கும்போது இவர்கள் யாரேனும் இருந்தார்களா என்று கேட்டபோது, பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்தின் படத்தைப் பார்த்து அவர்தான் கொடுத்தார் என்பதை சொல்லியிருக்கிறார்கள். அவருடன் எங்க முதலாளி பண்ணையாரின் டிரைவரும் இருந்தார் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் பண்ணையார் என்று கூறியது நயினார் நாகேந்திரனைத்தான்.
காவல்துறையினர் நடத்திய இந்த சோதனையிலும் விசாரணையிலும் அடுக்கடுக்காக கிடைக்கும் பல தகவல்கள் அவர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த 4 கோடி மட்டுமில்லாமல், இன்னும் நிறைய பணம் அந்த கட்டிடத்திலிருந்து கை மாறியிருக்கிறது. கிட்டத்தட்ட 65 கோடி ரூபாய் அங்கிருந்து பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பல தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளன.
இவ்வளவு பணம் எங்கிருந்து இங்கு வந்தது என்று விசாரித்த போது, டெல்லியில் பியூஷ் கோயலிடமிருந்து பணம் அனுப்பப்பட்டிருப்பதாகவும், அதில் ஒரு பகுதி பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கும், இன்னொரு பகுதி கோவைக்கும் அனுப்பப்பட்டிருப்பதாக அதிகாரிகள் வட்டாரங்களில் சொல்கிறார்கள். மொத்த பணத்தையும் நேரடியாக டெல்லியிலிருந்து அனுப்பாமல், ஹவாலா மூலமாக செளகார்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து distribution நடந்திருப்பதாக தகவல்கள் காவல்துறைக்கு கிடைத்துள்ளன.
பாஜக அலுவலகமான கமலாலயத்திலிருந்து கேசவ விநாயகம் மூலமாக பல பகுதிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதேபோல் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இந்த 4 மாடி கட்டிடத்தில் இருந்தும் பணம் அனுப்பப்பட்டிருப்பதாகவும் பல தகவல்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் வட்டாரங்களில் விசாரித்தபோது சொல்கிறார்கள்.
இந்த 4 மாடி கட்டிடம் பாஜகவின் தொழில்பிரிவுத் தலைவர் கோவர்த்தனனுக்கு சொந்தமானது. அவர் உடல்நலக் குறைபாட்டால் பெரிதாக ஆக்டிவாக இல்லாமல், வீட்டில் இருக்கிறார். அவரது இடத்தை கேசவ விநாயகம் பயன்படுத்தி, அங்கிருந்து ரகசியமாக பணத்தை அனுப்பி வருகிறார் என்பதே காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலாக இருக்கிறது.
இந்த விசாரணை தொடர்ந்து நடைபெறும் போது, பாஜகவில் உள்ள பல பெரிய தலைகள் இதில் சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“தேர்தலுக்கு பிறகு டிடிவி தலைமையில் அதிமுக”: அண்ணாமலை கேரண்டி!
சனாதனத்தை அவமதிக்கும் திமுக: அமித்ஷா தாக்கு!
தேர்தல் விளம்பரங்கள்: உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு!
ஐயா அவர்களுக்கு வணக்கம் நாமக்கல் மாவட்டம் திண்டமங்கலம் கிராமம் நல்லா கவுண்டம் பாளையம் அருந்ததியர் காலனி ஸ்டாலின் ஐயா நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வருகை தர வேண்டும் என்னுடைய அன்பான வேண்டுகோள் நன்றி வணக்கம்