முதல்முறையாக களத்திற்கு சென்று மக்களை சந்திக்கும் விஜய்: எங்கு? எப்போது?

Published On:

| By Kavi

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் செல்ல காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவெடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்காக 4,800 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

இந்த சூழலில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2023 முதல் இவர்களது போராட்டம் தொடர்ந்து வருகிறது.
பல்வேறு அரசியல் கட்சிகளும் பரந்தூர் போராட்ட குழுவினரை சந்தித்து ஆதரவுதெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யும் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்த சூழலில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை சந்திப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் தலைமை சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை ஏற்று பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை சந்திக்க விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி வரும் 20ஆம் தேதி விஜய் போராட்டக் குழுவினரை சந்திக்க உள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக மக்களை நேரடியாக களத்திற்கு சென்று சந்திக்க உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது போராட்ட குழுவினரிடம் விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பற்றிய விவரங்களை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சேகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

முதல்வர் மீதான வழக்கில் ரூ.300 கோடி முடக்கம் : அமலாக்கத்துறை அதிரடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share