அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. police guard Sengottaiyan’s house!
அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதையொட்டி, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அன்னூர் அருகே கடந்த 9ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்ட நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை.
இதுதொடர்பாக நேற்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “எங்களை உருவாக்கிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்கள் அழைப்பிதழில் இல்லை. மேலும், இந்த நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்களிலும் அவர்களது படங்கள் இல்லை. எனவே தான் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை” என தெரிவித்தார். இது அதிமுகவிற்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
மேலும் தன்னை சந்திக்க வந்தர்களிடமும் எடப்பாடி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் மீதான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், செல்லூர் ராஜூ போன்றோரே செங்கோட்டையன் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்தனர். வேறு சிலரும் அவரது பேச்சுக்கு கட்சியினர் மத்தியில் அதிருப்தி தெரிவித்தனர்.
இதன் அடுத்தக்கட்டமாக அக்கட்சி தொண்டர்களே செங்கோட்டையன் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் டிஜிபி அறிவுறுத்தலின் பேரில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டிற்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.