பாலியல் வன்கொடுமை… அதிமுக, பாஜக போராட்டம்: தமிழிசை, ஜெயக்குமார் மீது வழக்கு!

Published On:

| By Selvam

அண்ணா பல்கலைக்கழக பெண் பாலியல் வன்கொடுமையை கண்டித்து நேற்று (டிசம்பர் 26) போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜகவினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து அதிமுக, பாஜக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

கிண்டி அண்ணா பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, கே.பி.கந்தன், அசோக் மற்றும் அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கணக்காணோர் பங்கேற்றனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால், அனைவரையும் கைது செய்த போலீசார், அருகில் உள்ள தனியார் மண்டபத்திற்கு பேருந்தில் அழைத்து சென்றனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட 900 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்தநிலையில், தமிழிசை உள்பட பாஜகவினர் 417 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செல்வம்

மன்மோகன் சிங் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம்: அழைப்பு விடுத்த திருமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share