ராகுல் காந்தி கைது!

அரசியல்


நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி அமலாக்கத்துறையில் ஆஜராகியுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்கனவே அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரான நிலையில் இன்று மீண்டும் ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி இன்று ஏபிஜே அப்துல் கலாம் சாலையில் உள்ள அமலாக்கத் துறையில் சோனியா காந்தி ஆஜராகியுள்ளார்.

அமலாக்கத் துறையின் செயலை கண்டித்து தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக நாடாளுமன்றம் அமைந்துள்ள விஜய் சவுக் பகுதியிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணியாக புறப்பட்டனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக எம்.பி.ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அவர்கள், மத்திய நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று பதாகைகளையும் ஏந்திச் சென்றனர். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். குறிப்பாக புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று பொறுப்பேற்ற நிலையில் காங்கிரஸ் எம்.பி.க்களின் பேரணி நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பேரணியாக சென்றவர்களை டெல்லி போலீஸ் தடுத்து நிறுத்தியது. பின்னர், ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கைது செய்து வேனில் ஏற்றியது. காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டதற்கு சாலையிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார் ராகுல் காந்தி. பின்னர் அவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

டெல்லி போலீசார் நடவடிக்கை காங்கிரஸார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா

+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *