விஜயகாந்த் நினைவு நாளை ஒட்டி இன்று (டிசம்பர் 28) தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்திலிருந்து தேமுதிகவினர் அமைதிப் பேரணி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று தேமுதிக சார்பில் குருபூஜையாக கடைபிடிக்கப்படுகிறது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடம் கோவில் போன்று மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காலை முதல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜயகாந்த் நினைவிடத்தில் குவிந்து வருகின்றனர். அஞ்சலி செலுத்த வரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இன்று காலை தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்திலிருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதி பேரணி செல்ல திட்டமிட்டிருந்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் காவல்துறையினருடன் தேமுதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி, “விஜயகாந்த் குருபூஜைக்கு தேர்தல் ஆணையத்தில் இருந்து நினைவிடம் வரை அமைதி பேரணி நடத்த திட்டமிட்டிருந்தோம். இதற்காக, டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் டிசம்பர் 5-ஆம் தேதி அனுமதி கேட்டு கடிதம் கொடுத்திருந்தோம்.
ஆனால், நேற்று (டிசம்பர் 27) மாலை 4 மணிக்கு பேரணிக்கு அனுமதி இல்லை என்று காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவித்தார்கள். நாங்கள் கடிதம் கொடுத்து ஐந்து அல்லது பத்து நாட்களில் பேரணிக்கு அனுமதி இல்லை என்று சொல்லியிருந்தால் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றிருப்போம்.

காவல்துறையின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோருக்கு பிறந்தநாள், நினைவு நாளில் பேரணிக்கு அனுமதி கொடுக்கிறார்கள். விஜயகாந்த் பேரணிக்கும் அனுமதி கொடுத்திருக்கலாம்.
இது அரசியல் காழ்ப்புணர்ச்சியா அல்லது காவல்துறை காழ்ப்புணர்ச்சியா என்று தெரியவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநகர ஆணையருக்கு உத்தரவிட்டு பேரணி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…