எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 19) நடத்த திட்டமிட்டிருந்த அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த அக்டோபர் 17ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2வது நாளான நேற்று (அக்டோபர் 18) காலை சட்டசபை கூடியதும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற உத்தரவை சபாநாயகர் பின்பற்றவில்லை என்று குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக ஆர்.பி.உதயகுமார் அறிவிக்கப்படாததை எதிர்த்து இன்று (அக்டோபர் 19) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்தது.
இதற்காக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபட அனுமதி கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தது. இந்த நிலையில் இன்று நடத்த திட்டமிட்டிருந்த அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்