அனுமதியின்றி பிரச்சாரமா? நாம் தமிழர் வேட்பாளர் மேனகா பதில்!

அரசியல்

அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்ததை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் வேட்பாளர் மேனகா மனு அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதனால் ஈரோடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு வேட்பாளரும் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது முன் அனுமதி பெற வேண்டும். தேர்தல் அலுவலகத்தில் இதற்காக எந்த வழித்தடத்தில் எத்தனை பேர் பிரச்சாரத்திற்கு வருவார்கள் என்பதை முன்பே எழுத்துப் பூர்வமாகத் தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை.

இந்நிலையில் இந்த விதிமுறையைப் பின்பற்றாமல் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா அவரது ஆதரவாளர்கள் 30-க்கும் மேற்பட்டோருடன் ஈரோடு ஆலமரத்தெரு பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் என்று அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது அங்கு பணியில் இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், மேனகாவின் பிரச்சாரம் குறித்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள். இந்த விசாரணையின் போது தான் மேனகா அனுமதி பெறாமல் அப்பகுதியில் பிரச்சாரம் செய்தது தெரிய வந்தது.

இது குறித்துத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட 30 பேர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் வேட்பாளர் மேனகா இன்று (பிப்ரவரி 22) தேர்தல் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடந்த 20 ஆம் தேதி திண்ணை பிரச்சாரம் செய்வதற்காக நான் சென்றிருந்தேன். அதற்கு அனுமதி வாங்கவில்லை என்று வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆனால் ஏற்கனவே தேர்தல் ஆணையம் திண்ணை பரப்புரை செய்வதற்கு அனுமதி தேவையில்லை என்று வாய்மொழியாகச் சொல்லியிருந்தார்கள். தற்போது அதற்காக வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

police case on naam thamizhar katchi

அந்த வழக்கை ரத்து செய்யக் கூறி மனுத் தாக்கல் செய்துள்ளோம். அதுமட்டுமில்லாமல் வருகின்ற நாட்களில் நான் தொகுதி முழுமைக்கு சென்று மக்களை சந்திப்பேன். இதற்கும் அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளேன்.

திமுக 34 வார்டுகளிலும் மக்களை அடைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான அனுமதி கடிதத்தைக் கேட்டால், கடிதம் இப்போது எங்களிடம் இல்லை. 2 மணிக்கு மேல் வந்து பாருங்கள் என்று சொல்கிறார்கள்.

இதற்கு என்ன அர்த்தம், திமுக அனுமதி கடிதம் வழங்கவில்லை. 2 மணிக்கு மேல் வந்து பார்க்க சொல்கிறார்கள் என்றால், இனிமேல் தான் அனுமதி கடிதத்தை தயார் செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு ஆதாரமாக இருக்கிறது.

அதையும் தாண்டி வெளிப்படையாக மக்களுக்கு திமுக பரிசுப் பொருட்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த கட்சியின் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும்.

நாம் தமிழருக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்துவிடும் என்பதால் தான், ஆளுங்கட்சியினர் இது போன்ற நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வழக்குப் போடுவதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். எதுவானாலும் சந்திக்கத் தயார்” என்று கூறியிருக்கிறார் மேனகா.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் நாம் தமிழர் வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய வந்த அக்கட்சியின் தலைவர் சீமான், அருந்ததியர் சமுதாயம் பற்றி பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியது. அதுபற்றி விளக்கம் அளிக்குமாறு நாம் தமிழர் வேட்பாளர் மேனகாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியினரிடம் கேட்டபோது, “தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசாத பேச்சா? தலைவர்கள் பேசாத பேச்சா? விஷயம் அதுவல்ல… நாம் தமிழர் தேர்தல் பணிகள் தீவிரமாக இருப்பதால் எங்களை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும் என்று திமுக கூட்டணி விரும்புகிறது. அவர்களின் விருப்பத்தை தேர்தல் ஆணையம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. இவற்றை எல்லாம் சந்திப்போம்” என்கிறார்கள்.

மோனிஷா

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

அதிபர் தேர்தல் : ட்ரம்புக்கு போட்டியாக இந்திய வம்சாவளி… யார் இந்த விவேக் ராமசாமி?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *