எடப்பாடி பழனிசாமி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யும் சர்வாதிகாரப்போக்கு தொடருமானால் அதிமுக தொண்டர்கள் மனித வெடிகுண்டாக மாறுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 11-ஆம் தேதி மதுரை விமான நிலையத்தில் அமமுக வெளிநாடு வாழ் தமிழர்கள் நலப்பிரிவு செயலாளர் ராஜேஸ்வரன் தாக்கப்பட்ட விவகாரத்தில்,
எடப்பாடி பழனிசாமி மீது 6 பிரிவுகளின் கீழ் மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினர் ஜெயவர்தன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

மதுரை பழங்காநத்தத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசியபோது, “இந்த ஆர்ப்பாட்டம் ஜனநாயக முறையில் நடைபெற்று வருகிறது. ஸ்டாலினுடைய ஏவல் துறையாக காவல்துறை கண்ணியம் இழந்துள்ளது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யும் சர்வாதிகார போக்கு தொடருமானால் மதுரையில் மனித வெடிகுண்டாக அதிமுக தொண்டர்கள் மாறுவார்கள்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். மதுரை அதிமுக தொண்டர்கள் ஜெயிலுக்கு போவதற்கு பயந்தவர்கள் இல்லை. நாங்கள் பல ஜெயில்களை பார்த்தவர்கள். மதுரை கண்டன ஆர்ப்பாட்டம் வெறும் டிரைலர் தான். திமுகவின் பூச்சாண்டிகளுக்கெல்லாம் அதிமுக பயப்படாது” என்று தெரிவித்தார்.
செல்வம்
மே 1 முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு: நிழல் பட்ஜெட்டில் பாமக
தொடர் அமளி: மக்களவை மாநிலங்களவை ஒத்திவைப்பு!