திமுகவின் ஆதரவு இயக்கமான கொங்குநாடு வேட்டுவ கவுண்டர்கள் இளைஞர் நல சங்கம் மற்றும் புதிய திராவிட கழகத்தின் மாநில மாநாட்டுக்கு ஈரோடு போலீஸ் அனுமதி மறுத்திருப்பது கொங்கு அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
கொங்கு பகுதி அரசியலில் முக்கிய கட்சிகள் அனைத்திலும் பெரும்பாலும் கொங்கு வேளாளர் சமுதாயத்தினரே கோலோச்சி வருவதாகவும், இவர்களை தவிர பிற சமுதாயத்தினரும் அரசியல் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் கொங்கு சமூக நீதி மாநாட்டை புதிய திராவிட கழகம் அறிவித்தது.
இதன் தலைவரான கே.எஸ். ராஜ் (கவுண்டர்) இது தொடர்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கும் மாநாட்டுக்கு அழைப்பு கொடுத்தார். முதல்வர் ஸ்டாலினுடைய மாப்பிள்ளை சபரீசனையும் சந்தித்துப் பேசினார். திமுகவின் தோழமை இயக்கமாக இருக்கும் ராஜுக்கு சமீபத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு உட்பட்ட தமிழ்நாடு அரசு சீர் மரபினர் நல வாரிய அரசு சாரா உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டது.
இந்த மாநாட்டுக்கு அமைச்சர்கள் முத்துசாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன், மதிவேந்தன், ராஜ கண்ணப்பன், நாமக்கல் மாசெவும் எம்பியுமான ராஜேஸ்குமார் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
11 ஆம் தேதி மாநாடு நடக்க இருந்த நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலைய ஆய்வாளர் பிப்ரவரி 6 ஆம் தேதி இந்த மாநாட்டுக்கு அனுமதி அளிக்க முடியாது என்று கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து நெருக்கடி, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றைக் காரணம் காட்டியுள்ள கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுமதி மறுப்புக் கடிதத்தில் 3 ஆவதாக குறிப்பிட்டிருக்கும் காரணம் தான் கவனிக்க வைப்பதாக இருக்கிறது.
‘மனுதாரர் கோரியுள்ள இடமானது கொங்கு வேளாளர் கவுண்டர்கள் அதிகமாக வசிக்கும் இடம் என்பதாலும் இது தொடர்பாக இரு பிரிவினருக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் நாமக்கல் மாவட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருவதாலும் அனுமதி மறுக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புதிய திராவிட கழகத்தின் தலைவர் ராஜ் கவுண்டரிடம் பேசினோம்.’
“எனது தலைமையில் வருகிற 11.2.2024 அன்று ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை திடலில் சமூகநீதி மாநாடு நடைபெற இருந்தது.
கொங்கு மண்டலத்தில் அதிகமாக வாழுகின்ற அருந்ததியர், வேட்டுவ கவுண்டர், ஆதி திராவிடர், நாடார், முதலியார், வன்னியர், நாயக்கர், செட்டியார்,தேவர்,முத்தரையர், குலாலர், மற்றும் வீரசைவ பண்டாரம். சமூகத்தினர் என அனைத்து சமுதாய தலைவர்களையும் ஒருங்கிணைத்து கொங்கு நாட்டின் சமூக நீதி 5- வது மாநில மாநாடாக நடத்த ஆறு மாதங்களாக திட்டமிட்டு பணியாற்றினோம்.
இந்த மாநாடு பற்றி அமைச்சரும் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதியை சந்தித்து அழைப்பு விடுத்தோம், மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். ‘நேரமில்லாததால என்னால வர முடியலை. அமைச்சர்களை அனுப்பி வைக்கிறேன்’ என்று சொன்னார். முதல்வரின் மாப்பிள்ளை சபரீசனையும் சந்தித்து இந்த மாநாட்டின் அவசியம் குறித்து பேசினோம். அவரும் அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று சொன்னார். இப்படி இரு முக்கியமான ஆளுமைகளின் ஆசியோடுதான் இந்த மாநாடு ஏற்பாடானது.
இந்நிலையில் கடந்த 6-2-2024 அன்று ஈரோடு மாவட்ட காவல்துறை மாநாட்டிற்கு அனுமதி மறுத்துவிட்டது..
இதன் மூலம் அப்பட்டமாக அனைவரும் அறிய வேண்டிய செய்தி என்னவென்றால்… கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு மாநாடு மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு காவல்துறை எவ்வித நிபந்தனையும் இன்றி அனுமதி வழங்குகின்றது. கடந்த வாரம் பெருந்துறையில் நடந்த கொமதேக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கியது.
கொங்கு மண்டலத்தில் சாதி வர்க்கமும் அதிகார வர்க்கமும் ஒருங்கிணைந்து ஒரே சமூகத்தை மட்டும் உயர்த்திப் பிடிக்கிறது. மற்ற சமூகங்களை கிள்ளு கீரைகளாகவும் நினைத்து அடிமைப்படுத்தி வருகிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் கொங்கு மண்டலத்தில் இருந்து சிலர் ஆட்சி மேலிடத்துக்கும், திமுக கட்சி மேலிடத்துக்கும் தவறான பிம்பங்களை உருவாக்கச் செய்து மாநாட்டுக்கு தடை போட முயற்சிக்கிறார்கள்.
உடனடியாக எங்கள் சமூக நீதி மாநாட்டிற்கு அனுமதி கேட்டு நாங்கள் சென்னை உயர் நீதிமன்றம் சென்றோம். ஈரோடு மாவட்டம் பெருந்துறை, பைபாஸ் சாலையில் விஜயமங்கலம் டோல்கேட் அருகில் வருகிற 18 -2-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சமூக நீதி மாநாட்டை நடத்த அனுமதி வழங்கியும், காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்துக் சமூகத் தலைவர்களும் அமைச்சர் பெருமக்களும் கலந்து கொள்கின்றனர்” என்றார்.
ஈரோடு அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘ஈரோடு மாவட்டத்தில் திமுகவுக்கு ஆதரவாக, அதுவும் அமைச்சர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டுக்கு போலீஸ் தடை விதிக்கிறது என்றால் ஆச்சரியம்தான். அமைச்சர் முத்துசாமி நினைத்திருந்தால் இந்த மாநாடு திட்டமிட்டபடி நடந்திருக்கும்” என்கிறார்கள்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’வீரர்களின் விசுவாசத்தை பெறுவது எப்படி?’ : தோனி அளித்த ஆச்சரிய பதில்!
முறிந்த நட்பு மீண்டும் தொடர என்ன செய்ய வேண்டும்?
இந்த பரதேசிகள் பேசினா பேச்சுக்கு மாட்டுசந்தைமாநாடுதான் கரைட்