விசிக நிர்வாகிகளை விடிய விடிய வேட்டையாடிய காவல் துறையினர்!

Published On:

| By Kavi

காவல்துறையை இழிவாகப் பேசிய விசிக நிர்வாகிகளை இரு மாவட்ட போலீசார் விடிய விடிய வேட்டையாடி கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காவல் நிலையம் எதிரில் ஜனவரி 27 ஆம் தேதி விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் காவல் துறையினருக்கு எதிராக கோஷமிட்டனர்.

“காவல் துறையே காவல் துறையே, வெளியே வாடா தைரியம் இருந்தால் வெளியே வாடா, அன்றைக்குக் குதித்தாயே, இன்றைக்கு எங்கே ஆளைக் காணோம் காவல் துறையே, மாமூல் வாங்கி குடும்பம் நடத்தும் காவல் துறையே என காவல் துறையினருக்கு எதிராக ஒருமையிலும் பேசிய வீடியோவும் வெளியானது.

காவல்துறையினரையே இவ்வாறு இழிவாக பேசிய விவகாரம் மேலிடத்துக்குத் தெரியவர, பேசிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவும் திருவண்ணாமலை போலீசுக்கு வந்தது.

ஐஜி கண்ணன்

வடக்கு மண்டலம் ஐஜி கண்ணன், திருவண்ணாமலை எஸ்.பி கார்த்திகேயன் மற்றும் வேலூர் டிஐஜிக்கு, காவல்துறையினரை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியவர்களைக் கைது செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

அதன்படி ஒரு காவல் ஆய்வாளர், இரண்டு எஸ்ஐ மற்றும் போலீசார் அடங்கிய 7 குழு அமைக்கப்பட்டது.

அதுபோன்று திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து இரு குழுக்கள், உள்ளூர் போலீசார் 25 பேர், பட்டாலியன் போலீசார் 50 பேர், ஆயுதப்படை போலீசார் 45 என மொத்தம் 200 போலீசார் கடந்த ஜனவரி 28ஆம் தேதி தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

police arrested vck party members

ஒவ்வொரு குழுவுக்கும் எஸ்.பி கார்த்திகேயன் சில உத்தரவுகளை வழங்கினார்.
அதன்படி போலீசாருக்கு எதிராக கோஷமிட்ட வீடியோவில் உள்ளவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள் என கண்டுபிடித்து அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி போலீசார் பறந்தனர்.

நேற்று (ஜனவரி 29) அதிகாலை வரை 12 விசிக நிர்வாகிகளை பிடித்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்துவிட்டு வாக்குமூலம் பெற்றனர், அதில் ஒரு வாலிபர், “சார் நான் தனியார் நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் வாங்குகிறேன், அன்றைக்கு மதிகெட்டு வந்துவிட்டேன்.

அனைத்துக்கும் வந்தவாசியை சேர்ந்த ம.சு அருண் மற்றும் பனையூரை சேர்ந்த கன்னியப்பன் ஆகிய இருவர்தான் காரணம்” என கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களை நேற்று இரவு போளூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி, போலீசார் சிறையில் அடைத்தனர்.

காவல் துறையினருக்கு எதிராக விசிக நிர்வாகிகள் திடீரென கோஷமிட என்ன முன்விரோதம் என்று விசாரித்தோம்.

“திருவண்ணாமலை மாவட்டத்தில் விசிக வினர்தான் அதிகம் இருக்கிறார்கள். அவர்கள்தான் காவல் நிலையத்தில் அதிகமாக பஞ்சாயத்து செய்து வருகின்றனர்.

காவல் துறையினருக்கும் தேவையானதை செய்து நெருக்கமாக இருந்து வந்தனர். இந்த சம்பவம் தற்போது அதிகமாகிவிட்டது, அப்படித்தான் ஆரணி டவுன் காவல் நிலையத்தில் சிவில் பிரச்சினை சம்பந்தமாக புகார் வந்துள்ளது.

அந்த புகாரை எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி சிஎஸ்ஆர் போட்டு விசாரித்து வந்தார்.
அப்போது விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்று, எஸ் ஐ கிருஷ்ணமூர்த்தியிடம் வாக்கு வாதம் செய்தார்.

எஸ் ஐ கிருஷ்ணமூர்த்தியை பார்த்து, “ஒரே சாதி… நீ சாதிக்காரனுக்கு எதிராக செயல்படுற. நான் பார்த்துக்கிறேன், என்னை யார் என்று காட்றேன்” என்று மிரட்டலாக பேசியதை விசிகவினரே வீடியோ எடுத்து முகநூல் பக்கத்தில் பதிவு செய்துவிட்டனர்.

இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிந்து காவல்நிலையத்திற்குள்ளே வந்து மிரட்டுகிறான், அவனை உடனே கைது செய்யுங்கள் என்று உத்தரவிட்டனர்.

அதன்படி எஸ்பி கார்த்திகேயன் பலத்த போலீஸ் படையுடன் வந்து பல எதிர்ப்புகள் போராட்டங்களை மீறி ஜனவரி 7ஆம் தேதி விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கரனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

சிறையிலிருந்து 20 நாட்களுக்குப் பிறகு பாஸ்கரன் பிணையில் வந்தபோதுதான் தனது பலத்தைக் காட்டும் வகையில் காவல் துறையினருக்கு எதிராகவும் அச்சுறுத்தும் வகையிலும் கோஷம் எழுப்பினர்.

இதையடுத்துதான் நேற்று முன் தினம் இரவு தொடங்கி விடிய விடியத் தேடுதல் வேட்டை நடத்தி விசிகவினரை கைது செய்தோம்” என்கின்றனர் திருவண்ணாமலை போலீசார்.

வணங்காமுடி

மருத்துவ காலிப்பணியிடங்கள்: ஓபிஎஸ் காட்டம்!

சொத்துவரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share