நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினரை போலீசார் இன்று (ஜனவரி 22) தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
பெரியார் குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக உள்ளிட்ட பல தரப்பிலும் இருந்து கண்டனங்கள் குவிந்தது.
பெரியார் குறித்த தனது பேச்சுக்கு சீமான் ஆதாரங்களை காட்ட வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதுகுறித்து பேசிய சீமான், “பெரியார் புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குங்கள். என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் ஆதாரங்களை காட்டுகிறேன்” என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், சீமான் வீட்டை பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிடப் போவதாக கோவை ராமகிருஷ்ணன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் அறிவித்தனர். இதனையடுத்து நேற்று இரவு முதல் சென்னையின் பல பகுதிகளிலும் சீமானுக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடுவதற்காக, கோவை ராமகிருஷ்ணன், திருமுருகன் காந்தி, நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்ட பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் குவிந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் சீமானுக்கு எதிராக தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

அதேவேளையில், சீமான் வீட்டின் முன்பாக நாம் தமிழர் கட்சியினர் குவிந்தனர். அவர்கள் வீட்டின் முன்பாக நாற்காலி போட்டு அமர்ந்திருந்தனர். மேலும், அங்கு வந்திருந்த நிர்வாகிகளுக்காக சீமான் வீட்டில் சிக்கன் பிரியாணி தயார் செய்யப்பட்டது.
இந்தநிலையில், சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். சீமான் வீட்டை பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.