மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் அவதூறு பரப்பியதாக தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜூன் 7-ஆம் தேதி எஸ்.ஜி.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், மதுரை பெண்ணாடம் 12-வது பேரூராட்சி வார்டு உறுப்பினர் விசுவநாதன் கட்டாயப்படுத்தியதால் மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்த தூய்மை பணியாளர் ஒருவர் இறந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மெளனம் காப்பதாக கருத்து பதிவிட்டிருந்தார்.
சு.வெங்கடேசன் மற்றும் வார்டு உறுப்பினர் விசுவநாதன் மீது எஸ்.ஜி.சூர்யா அவதூறு பரப்புவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர் காவல்துறையினர் நேற்று இரவு 11.15 மணியளவில் சென்னை தி.நகரில் உள்ள எஸ்.ஜி.சூர்யா இல்லத்திற்கு வந்து அவரை கைது செய்தனர்.
எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் அவர்கள் அப்பகுதியிலிருந்து கலைந்து சென்றனர்.
எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள்.
விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது.
அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது.
கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர்க் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை திமுக அரசு நினைவில் கொள்ள வேண்டும்.
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இது போல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு. பாஜக தொண்டர்களை, இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது.
எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
தளபதியைப் பார்க்க வெயிட்டிங்: சந்தோசத்தில் மாணவிகள்!
“மோடி அமித்ஷா இந்தியாவில் இருக்க மாட்டார்கள்” – ஆ.ராசா
TNPL: குருசாமி அஜிதேஷ் அதிரடி- கடைசி ஓவரில் ட்விஸ்ட்!