சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்து, இன்றைய தினம் தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தீர்ப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அந்த வழக்கின் விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தேன். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது .
எனவே இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவானது ஜூன் 21-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அதேபோல, வங்கி ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதனை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். எனவே இந்த வழக்கின் தீர்ப்பை அதுவரை தள்ளிவைக்க வேண்டும்” என்ற கோரிக்கையுடன் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்படவில்லை. புதிதாக செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் 25-ஆம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி ஒத்திவைத்தார்.
இந்தநிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 40-வது முறையாக ஜூன் 25-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இன்றைய விசாரணையின் போது செந்தில் பாலாஜி காணொலி மூலம் ஆஜரானார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நீதிபதி சந்துரு பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் – கொந்தளித்த எச்.ராஜா
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து ஐந்து பேர் உயிரிழப்பா? ஆட்சியர் சொல்வதென்ன?