பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவோடு கூட்டணிக்காக பேசிக் கொண்டே, இன்னொரு பக்கம் பாஜகவோடும் பேச்சுவார்த்தை நடத்தி இன்று (மார்ச் 19) பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்டது.
அதோடு சேலத்தில் பிரதமர் மோடியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸும், டாக்டர் அன்புமணியும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரியாக்ஷன் என்னவென்று அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம்.
“பாமகவின் இந்த செயல்பாட்டால் எடப்பாடி கடுமையாக அப்செட் ஆகிவிட்டார். மார்ச் 17 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை டாக்டர் ராமதாஸின் தூதராக பாமக எம்.எல்.ஏ. அருள் சென்னையில் எடப்பாடியை சந்தித்தார். அப்போதே பாமக-அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாக இரு கட்சி நிர்வாகிகளும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் ஒரே நாளில் நிலைப்பாட்டை மாற்றி பாஜகவுடன் கை கோர்த்துவிட்டார் அன்புமணி.
நேற்றும் இன்றும் அவரது இல்லத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர், கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவினர் எடப்பாடியை சந்தித்தனர். அப்போது பாமக-பாஜக கூட்டணி பற்றி அவர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார் எடப்பாடி.
‘பாமக கேட்டதையெல்லாம் நாம கொடுக்குறோம்னு சொன்னோம். ஒரு கட்டத்துல சேலம் எம்பி தொகுதி வேணும்னு கூட கேட்டாங்க. அது பத்தியும் பேசிக்கலாம்னு சொன்னேன். போன சட்டமன்றத் தேர்தல்ல பாமக போட்டியிட்ட தொகுதிகள்ல தேர்தல் செலவுக்கு கொடுத்தது சரியாக போய் சேரலைனு நமக்கு தெரிஞ்சது. அதுபோல இந்த தேர்தல்ல ஆகிடக் கூடாதுனு சொன்னோம்.
இந்த நிலைமையிலதான் அருள் இங்க வந்தாரு. அவரோட போன்லயே டாக்டர்கிட்டையும், அன்புமணிக்கிட்டையும் பேசினேன். நானே தைலாபுரம் வர்றேன்னு சொன்னேன். ‘நிர்வாகிகள் கூட்டத்தைப் போட்டு பேசிட்டு நாங்களே வர்றோம்’னு அன்புமணி சொன்னாரு. ஆனா ஒரே நாள்ல மாத்திக்கிட்டாரு.
‘பாமக என்னதான் சொன்னாலும் அவங்களை ஒரு பத்து சதவிகிதம் டவுட்டாவே பாருங்க’னு வேலுமணி அப்பவே சொன்னாரு. ஆனா நான் அவங்களை நம்பினேன்.
இதுக்கெல்லாம் காரணம் பாமக தலைவர் அன்புமணியை பிஜேபி தரப்புலர்ந்து மிரட்டினதுதான். மெடிக்கல் காலேஜ் ஒதுக்கீடு தொடர்பா சிபிஐ போட்ட வழக்கு அன்புமணி மேல இன்னும் இருக்கு. அதை வச்சி, அடுத்து அமலாக்கத்துறையும் வரும்னு அன்புமணியை மிரட்டியிருக்காங்க.
அதனாலதான் அதிமுக கூட்டணியை வலியுறுத்தின தன்னோட அப்பா ராமதாஸ்கிட்ட, ‘நான் தேர்தலுக்கு பிறகு ஜெயிலுக்கு போறதை பாக்க ஆசைப்படுறீங்களா?’னு கேட்டிருக்காரு அன்புமணி. இதுக்குப் பிறகுதான் அவங்க பாஜக பக்கம் போயிருக்காங்க” என்று எடப்பாடி தலைமைக் கழக நிர்வாகிகளிடம் சொல்லியிருக்கிறார்.
இதுமட்டுமல்ல மேலும்… “பாமக வரலைனு வருத்தப்பட வேணாம். அவங்க வராததும் ஒரு வகையில நல்லதுதான். பாமக கூட்டணியில இருந்தா அதிமுகவுக்கு வழக்கமா விழக் கூடிய தலித் வாக்குகள் முழுதா விழாத நிலைமை இருந்துச்சு. பிஜேபியால எப்படி முஸ்லிம் வாக்குகள் நம்மை விட்டுப் போச்சோ…அதேபோல, பாமகவால தலித் வாக்குகளும் போச்சு. இப்ப சிறுபான்மை ஓட்டு, தலித் ஓட்டுகள் கணிசமா அதிமுகவுக்கு வரும். நாம் தீவிரமா செயல்படுவோம்” என்று நிர்வாகிகளிடம் நம்பிக்கையூட்டும் விதமாக சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
CSK-விடம் உதவி கேட்ட அஸ்வின்… அவரின் ஆசை நிறைவேறுமா?
ஒரே மேடையில் இரு ஓபிசி தலைவர்கள் : பாஜக பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேச்சு!