புதுச்சேரி மாநில அரசு வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாமகவினர் இன்று கண்டன பேரணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசின் அறிவிப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இடம்பெறாததை கண்டித்து, பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ததை கண்டித்து அண்ணாசிலை அருகில் இருந்து சட்டப்பேரவையை நோக்கி ஊர்வலம் நடைபெறும் என்று பாமகவினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி, இன்று (நவம்பர் 17) புதுச்சேரி பாமக மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் 500க்கும் மேற்பட்ட பாமகவினர், அண்ணா சிலை அருகில் இருந்து புதுச்சேரி சட்டமன்றம் நோக்கி கண்டன பேரணி மேற்கொண்டனர்.
இந்த நிலையில் சம்பா கோயில் அருகில் பேரணி வந்தவர்களை புதுச்சேரி காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர்.
அப்போது பேரணியில் ஈடுபட்டிருந்த பாமவினர், காவல் துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை தூக்கி எறிந்தும், அதன் மீது ஏறியும் சென்று, சட்டமன்ற வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல் துறையினர் தொடர்ந்து அவர்களை தடுக்க முயற்சித்தனர். ஆனால் காவல் துறையினரைத் தாண்டி பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெ.பிரகாஷ்