சௌமியாவுக்காக, ’இடைத் தேர்தல்’ பாணியில் தர்மபுரியில் குவிந்த பாமக நிர்வாகிகள்: பாஜக ஷாக்!

அரசியல்

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பாமகவின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் எல்லோரும் தர்மபுரி தொகுதியில் குவிந்திருக்கிறார்கள். அங்கு போட்டியிடும் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி செளமியாவை எப்படியாவது வெற்றிபெற வைக்க அரும்பாடுபட்டு வருகிறார்கள்.

இதனால் பாமக போட்டியிடும் மற்ற 9 தொகுதிகளிலோ, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் மற்ற தொகுதிகளிலோ அக்கட்சியினரின் கவனம் குறைந்து தர்மபுரியில் மட்டுமே குவிந்துள்ளது.  இது தேஜகூவில் இருக்கும் பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வரக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட பாஜக தலைமையில் பாமக, தமாகா, ஐ.ஜே.கே, அமமுக, புதிய நீதிக்கட்சி ஆகிய 9 கட்சிகள் இணைந்த கூட்டணியில் பாமக 10 இடங்களைப் பெற்றது.

திமுக, அதிமுக அல்லாத கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்குமோ என்று யோசித்த பாமகவின் பல புள்ளிகளும் போட்டியிடுவதில் இருந்து பின் வாங்கினார்கள். முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட பலரும் தேர்தலில் போட்டியிடவில்லை.

ஆனால், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கட்சியின் தலைவரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று டெல்லி தலைமை அறிவுறுத்தியது. அதன்படி  பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் உள்ளிட்ட தலைவர்கள் போட்டியிடுகிறார்கள். எனவே பாமகவின் தலைவரான அன்புமணியும்  தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பாஜக அழுத்தம் கொடுத்தது.  இதனால் ஏற்கனவே தர்மபுரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பாமக வேட்பாளர் அரசாங்கம் மாற்றப்பட்டு,  டாக்டர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தற்போது மருத்துவர் ராமதாசின் மொத்த குடும்பமும் தர்மபுரி தொகுதியில் குடியேறி வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டனர்.

 

டாக்டர் சௌமியா போட்டியிடுவதால் தர்மபுரியின் தட்பவெப்பம் சட்டெனெ மாறிவிட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பாமக நிர்வாகிகள் தர்மபுரிக்கு படையெடுத்து வருகின்றனர்.

தர்மபுரி தொகுதியில் பாமக குறிப்பிடத் தக்க பலத்தைப் பெற்றுள்ளது.

  • 1999 இல் 47.52% வாக்குகளைப் பெற்று பு.த.இளங்கோவன் வெற்றி பெற்றார்.
  • 2004 தேர்தலில் டாக்டர் செந்தில் 55.99% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
  • 2009 இல் மீண்டும் டாக்டர் செந்தில் போட்டியிட்டு 29.56% வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.
  • 2014 தேர்தலில் 42.46% வாக்குகளைப் பெற்று அன்புமணி வெற்றி பெற்றார்.
  • 2019 தேர்தலில் 41.18% வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார் அன்புமணி.

இப்படியான  வாக்கு சதவீதம்  உள்ள  நிலையில் 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த பின்னணியில் கட்சியின் தலைவருடைய மனைவி போட்டியிட்டு தோல்வியடைந்தால் கட்சிக்கு கவுரவப் பிரச்சினையாக மாறிவிடும், அதனால் செளமியாவை எப்படியாவது வெற்றி பெறவைக்க வேண்டுமென்று கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது பாமக தரப்பு.

8 பேர், மேடை மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

அன்புமணி போட்டியிட்ட போது பாமக மாநில, மாவட்ட நிர்வாகிகள் எல்லோரும் எப்படி தர்மபுரிக்கு  வந்து குவிந்து வேலை செய்தனரோ அதைவிட இரண்டு மடங்கு நிர்வாகிகள் தர்மபுரியில் களமிறங்கியுள்ளனர்.

பாமகவின் ஐந்து எம்.எல்.ஏக்களான அருள், ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், சிவகுமார் மற்றும் சதாசிவம் ஆகியோர் தர்மபுரியில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்கள். சேலம் எம்.எல்.ஏ அருள் மட்டும் அவ்வப்போது சேலத்திற்கும் தர்மபுரிக்கும் வந்து செல்கிறார். மற்ற 4 எம்.எல்.ஏ-களும் முழுநேரமும் தர்மபுரியிலேயே  இருந்து தேர்தல் பணி செய்து வருகின்றனர்.

இடைத் தேர்தல் என்றால் எப்படி திமுகவும், அதிமுகவும் தங்களின் ஒட்டுமொத்த மாநில நிர்வாகிகளையும் குறிப்பிட்ட ஒரு தொகுதியில் களமிறக்கி ஒவ்வொருவருக்கும் பகுதி பகுதியாக பிரித்துக் கொடுக்குமோ… அதே பாணியை  தற்போது பாமக தர்மபுரியில் பின்பற்றி வருகிறது.

தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மேட்டூர் 6 சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு ஒன்றியங்களுக்கும் ஒரு மாவட்டச் செயலாளர், நகரம் மற்றும் பேரூராட்சிகளுக்கு தலா ஒரு மாவட்டச் செயலாளர் மற்றும் ஒரு பூத்திற்கு ஒரு ஒன்றியச் செயலாளர் தலைமையில் 10 நிர்வாகிகள், அவர்களுக்குக் கீழ் பலர் என ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், கோவில் மற்றும் கூட்டம் இன் படமாக இருக்கக்கூடும்

அன்புமணி எம்.பியாக இருந்த காலத்தில் அன்புமணியை விட அவரது மனைவி செளமியா தான் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று, ஒவ்வொரு குடும்ப நிகழ்ச்சியிலும் பங்கேற்று வந்திருக்கிறார். இதனால் ஒவ்வொரு கிராமத்திலும் செளமியாவை தெரியாதவர்கள் இருப்பது மிகக் குறைவானதுதான் என்கிறார்கள் தர்மபுரி நிர்வாகிகள்.

இப்படி தர்மபுரி தொகுதியில் கவனம் செலுத்தக்கூடிய பாமக நிர்வாகிகள் யாரும் மற்ற 9 தொகுதிகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களுக்கு இவ்வளவு கவனம் செலுத்துவது இல்லை. அதேபோல் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் பாமக நிர்வாகிகளை தேட வேண்டிய நிலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள்.

கூட்டணிக் கட்சிகளிலிருந்து தலைவர்களும், விஐபிகளும் ஓட்டு கேட்க வரும் நேரத்தில் மட்டும் அந்த பகுதியைச் சேர்ந்த பாமகவின் ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தலையைக் காட்டி விட்டு புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதற்குப் பிறகு அவர்களை தொகுதிப் பக்கமே பார்க்க முடியவில்லை என்று புழுங்குகிறார்களாம் கூட்டணிக் கட்சிகள்.

3 பேர் இன் படமாக இருக்கக்கூடும்

பாஜக கூட்டணியில் இருக்கும் எந்த கட்சிக்கும் வட மாவட்டங்களில் பூத் அளவிலான கட்டமைப்பு பலம்  கிடையாது. பாமகவிற்கு அந்த பலம் இருக்கிறது என்பதால்தான் மிகுந்த முயற்சிகள் எடுத்து கூட்டணியில் சேர்த்தது பாஜக. ஆனால் அந்த கட்சியைச் சேர்ந்தவர்களே இப்படி இருக்கிறார்களே என்று பாஜக நிர்வாகிகள் கடும் அதிருப்தியிலும் அதிர்ச்சியிலும்  இருக்கிறார்கள்.

ஆனால் பாமகவினரோ தர்மபுரி என்ற ஒற்றை இலக்கை மட்டுமே கண்முன்னே வைத்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

வணங்காமுடி

அரண்மனை 4 ரிலீஸ் தேதி எப்போது?

ரூ.6,999 விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் Poco C61

 

+1
0
+1
7
+1
0
+1
5
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *