விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டை அறிவித்திருக்கிறார்.
இந்த மாநாட்டில் ஒரு லட்சம் பெண்களை திரட்ட வேண்டும் என்ற நோக்கோடு அவர் தமிழகம் முழுவதும் பயணம் செய்து விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகிகளை மாநாட்டுக்கு ஆயத்தப்படுத்தி வருகிறார்.
இதே நேரம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸும் விரைவில் ஒரு மாநாட்டை நடத்துவதற்கு திட்டமிட்டு இருக்கிறார் என்று தைலாபுரம் தோட்டத்திலிருந்து தகவல்கள் கசிகின்றன.
ஓரிரு வாரங்களாக அரசியல் அரங்கை விசிகவின் மாநாடு பற்றிய பேச்சுக்களே ஆக்கிரமித்திருக்கிறது. 2026 தேர்தலுக்கான கூட்டணியை மாற்றும் அளவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநாடு பற்றிய பேச்சு அமைந்திருக்கிறது.
இந்த நிலையில், வட மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க நாமும் ஒரு மாநாட்டை நடத்த வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் ராமதாஸ்.
சாதிவாரி கணக்கெடுப்பு பீகார் உள்ளிட்ட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் நடத்தப்பட வேண்டும் அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு மறு வரையறை செய்யப்பட வேண்டும் என்று பாமக தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் அதற்கான அதிகாரம் இருந்தும் அவர் தட்டிக் கழிக்கிறார் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் டாக்டர் அன்புமணி ஆகியோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் விசிகவின் மது போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டுக்கு கவுன்ட்டர் கொடுக்கும் வகையில், பாமகவின் செல்வாக்கை அரசியல் அரங்கில் நிலை நிறுத்தும் வகையில் தமிழ் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த கோரி மாபெரும் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார் ராமதாஸ்.
இது தொடர்பாக பல்வேறு சமுதாய இயக்கங்களோடும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.
விரைவில் இதற்கான அதிகாரபூர்வமான ஆயத்த கூட்டம் மற்றும் அறிவிப்புகள் இருக்கும். அப்போது பாமக நடத்தும் மாநாட்டில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்ற விவாதம் அரசியல் ரீதியான முக்கியத்துவம் பெறும் என்கிறார்கள் பாமக வட்டாரங்களில்.
விடுதலைச் சிறுத்தைகள் மாநாடு, விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு, பாமகவின் மாநாடு என வட தமிழ்நாடு சூடாகிக் கொண்டிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-வேந்தன்
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… நகைப் பிரியர்களுக்கு நல்ல வாய்ப்பு!
தனுஷுக்கு எதிராக FEFSI : நடிகர் சங்கம் கண்டனம்!