மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் சிலை திறப்பு நிகழ்வு இன்று (பிப்ரவரி 1) அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் நடந்தது. இந்நிகழ்வில் திமுக சார்பாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்ட நிலையில்… அவரை எதிர்த்து முழக்கங்கள் எழ பரபரப்பு ஏற்பட்டது. pmk oppose to minister sivashanka
என்ன நடந்தது, காடுவெட்டி கிராமத்தில்?
பாமகவின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த காடுவெட்டி குரு இறந்த பிறகு, அவரது குடும்பத்தினருக்கு பாமக முன்னுரிமை கொடுக்காததால், குருவின் மகனான கனலரசன் மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை தனியாக நடத்தி வருகிறார்.
குருவின் அக்கா மகனும், மருமகனுமான மனோஜ், காடுவெட்டி குரு மறைவுக்கு பிறகு இன்று வரை பாமக நிறுவனர் ராமதாஸ் குடும்பத்துக்கு எதிராக கடுமையாக விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்.
வெளிப்படையாகவே, குருவின் மரணத்துக்கு பாமக தலைமைதான் காரணம் என்று பேசி வருகிறார்.
அமைச்சர்களுக்கு அழைப்பு!- பாமக எதிர்ப்பு!

pmk oppose to minister sivashankar
இந்தநிலையில் இன்று (பிப்ரவரி 1) குருவின் பிறந்தநாளை ஒட்டி காடுவெட்டி கிராமத்தில் அவருக்கு முழு உருவ சிலை மாவீரன் மஞ்சள் படை சார்பாக நிறுவப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குருவின் மகன் கனலரசனும் அவருடைய மச்சான் மனோஜும் செய்தனர். இந்த விழாவுக்கு பாமக, விசிக தவிர பிற கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்தார்கள்.
அதிலும் குறிப்பாக திமுகவில் இருக்கும் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் சிவசங்கர், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர்தான் சிலை திறந்து முதல் மாலை அணிவிப்பார்கள் என்று அறிவித்தனர்.
அமைச்சர்களை வரவேற்று காடுவெட்டியில் கட்டவுட்களும், பேனர்களும் வைத்திருந்தனர்.
இந்தநிலையில் நேற்று பாமக துணை பொதுச்செயலாளரான அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில்,
“10.5 வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ஏமாற்றிய திமுக அரசின் அமைச்சர்கள் சிவசங்கர், பன்னீர்செல்வத்திற்கு மாவீரன் மண்ணில் இடமா? மன்னிக்குமா, மாவீரன் ஆத்மா? சாந்தியடையுமா மாவீரன் ஆத்மா? மாவீரன் மீது குண்டர் சட்டம் ஏவி, தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ச்சிய திமுகவின் அமைச்சர்கள் மாவீரன் சிலையை திறப்பதா? மாவீரன் சிலையை அவரது தாயாரை வைத்து திறக்கலாமே.
திமுக நிதியுதவி உடன் சில உட்கட்சி கருங்காலிகளின் இயக்கத்தில் செயல்படும் கனலரசனை அனைத்து வன்னிய இளைஞர்களும் நிராகரிக்கவேண்டும்.
மானமுள்ள வன்னியர்கள் திறப்பு விழா நிகழ்ச்சியை புறக்கணித்து எதிர்ப்பை காட்ட வேண்டும்” என்று அழுத்தமாக பதிவிட்டிருந்தார்.
எதிர்ப்பு கோஷம்!
இந்த நிலையில் இன்று (பிப்ரவரி1) மதியம் 12 மணியளவில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.வான க.சொ.க.கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ சுபா.சந்திரசேகர் உட்பட 100 பேர், 25க்கும் மேற்பட்ட வாகனங்களில் காடுவெட்டிக்கு சென்றனர். அழைக்கப்பட்ட இன்னொரு அமைச்சரான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வரவில்லை.
அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோரை உள்ளூர் பாமக பிரமுகர் சின்னபிள்ளை மற்றும் கனலரசன் குடும்பத்தினரும், ஊர்காரர்களும் வரவேற்று குரு சிலை அமைந்துள்ள இடத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கே அமைச்சர் சிலையை திறந்து வைத்து, மாலை அணிவித்த போது திடீரென பாமக கொடியுடன் வந்த இளைஞர்கள் திமுகவுக்கு எதிராகவும், அமைச்சர் சிவசங்கருக்கு எதிராகவும், 10.5 சதவிகித இட ஒதுக்கீடு கேட்டும் கோஷமிட்டனர்.
அதன்பிறகு சிவசங்கர் கீழே இறங்கி வரும் போது சிலர், ’10.5 சதவிகிதம் என்ன ஆனது?’ என்று அவரிடம் நேருக்கு நேராகவே கேட்டனர். அவர்களைத் திரும்பி பார்த்த அமைச்சர் சிவசங்கர், “இந்த இட ஒதுக்கீட்டை எங்களால் தான் கொடுக்க முடியும்… தலைமையிடம் பேசி முடிவெடுக்கப்படும்” என்று கூறிவிட்டு புறப்பட்டார்.
அப்போது சிலர், திமுக ஒழிக… 10.5 சதவிகித இட ஒதுக்கீடு எங்கே என்று மீண்டும் மீண்டும் கோஷம் எழுப்பினர்.
இந்தநிலையில் மாவீரன் மஞ்சள் படையை சேர்ந்தவர்களும், போலீசாரும் அமைச்சரை பத்திரமாக அழைத்து வந்து காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் பாமகவினர் திமுகவுக்கு எதிராகவும், அமைச்சருக்கு எதிராகவும் சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வந்தனர்.
பாமக பிரமுகரும் வழக்கறிஞருமான பாலு, தனது முகநூல் பக்கத்தில், தெறிக்கவிட்ட தம்பிகள்… தெறித்து ஓடிய அமைச்சர் சிவசங்கர்…’ என்ற தலைப்பிட்டு ஒரு பதிவை போட்டார்.
அதில், “குள்ள நரி அரசியல் செய்ய ஆசைப்பட்டு மாவீரன் பிறந்த ஊரான காடுவெட்டிக்குச் சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து வன்னிய மக்களின் நலம் விரும்பியாக தன்னை காட்டிக்கொள்ள முயற்சி செய்த அமைச்சர் சிவசங்கரை பார்த்து அன்புமணியின் தம்பிகள் ‘திமுக ஒழிக! 10.5 இட ஒதுக்கீடு என்ன ஆச்சு! மருத்துவர் அய்யா வாழ்க! மாவீரன் வாழ்க! வருங்கால முதல்வர் சின்னையா வாழ்க! என்று அமைச்சரின் கண்முன்னே நேருக்கு நேராக முழக்கமிட்டதை கண்டு தலைதெறிக்க ஓடியுள்ளார் அமைச்சர் சிவசங்கர்.
இனியும் வன்னியர் சமுதாய இளைஞர்களை ஏமாற்றி அரசியல் செய்ய முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். திமுகவில் தன்னை வன்னியர் சமூகத்தின் பிரதிநிதியாக முந்திரி கொட்டை போல் முந்திக்கொண்டு அறிக்கை விட்டும், பேசிக் கொண்டும் வரும் நீங்கள் உண்மையில் மாவீரன் மீது மரியாதையும், வன்னியர் சமூகத்தின் மீது பற்றும் கொண்டிருந்தால் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கிவிட்டு வாருங்கள் மாவீரன் சிலைக்கு மாலை அணிவிக்க நாங்களே உங்களை அழைத்து செல்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது? pmk oppose to minister sivashankar

இந்நிலையில் நாம் காடுவெட்டி குரு மருமகன் மனோஜை தொடர்புகொண்டு, காடுவெட்டியில் என்ன நடந்தது?” என்று கேட்டோம்.
அவர், “இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள்தான் அமைச்சரை அழைத்து வந்து, நல்ல முறையில் வழியனுப்பி வைத்தோம். உள்ளூர் பாமகவினர் பலரே அமைச்சரை கையெடுத்து கும்பிட்டு வரவேற்றனர். இந்த சிறப்பான நிகழ்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத வெளியூரில் இருந்து திட்டமிட்டு வந்த பாமக இளைஞர்கள் சிலர் அமைச்சருக்கு எதிராக கோஷமிட்டனர்.
அப்போதே உள்ளூர்காரர்கள், ‘வெளியூரில் இருந்து வந்து எதற்கு பிரச்சினை செய்கிறீர்கள்’ என்று எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அப்போது உள்ளூர்காரர்களுக்கும், வெளியூர்காரர்களுக்கு சின்ன பிரச்சினை ஏற்பட்டது. அவ்வளவுதான்” என்றார்.
அமைச்சர் சொல்வது என்ன?

pmk oppose to minister sivashankar
அமைச்சர் சிவசங்கரைத் தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டோம். “காடுவெட்டி குரு உருவசிலை திறப்பு விழா, பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள். அதற்கு பாமக தலைவரையோ, முக்கிய பிரமுகர்களையோ இவர்கள் அழைக்கவில்லை.
ஆனால் திமுக அமைச்சர்களை அழைத்ததால் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாமல் வெளியூர் விஷமிகளை அனுப்பி வைத்து கலவரம் செய்ய முயன்றனர். அதற்கு காரணம், பாமகவைச் சேர்ந்த துணை பொதுச்செயலாளர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட பதிவு ஒரு சாட்சியாகும்.
அவர்கள் சொல்வதை போல எங்களை யாரும் விரட்டவில்லை. நாங்கள் ஒரு மணி நேரம் நிகழ்ச்சியில் இருந்துவிட்டுதான் வந்தோம். நாங்கள் எப்போதும் மக்களோடு நிற்பவர்கள்” என கூறினார்.
ஏற்கனவே வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேவும் அமைச்சர் சிவசங்கர் பாமகவினருக்கு பதிலளித்து வந்தார். அப்போது முதல் பாமகவினர் அமைச்சர் சிவசங்கரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. pmk oppose to minister sivashankar