கடலூரில் பாமக பந்த் – முறியடித்த போலீஸ்: கள நிலவரம் இதோ…

அரசியல்

கடலூர் மாவட்ட நெய்வேலி அனல் மின்நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி குறைந்துவிட்டது. அதனால் நிலக்கரி எடுக்க அவசரமாக நிலம் தேவைப்படுவதால் என்.எல்.சி. நிறுவனமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து காவல் துறை பாதுகாப்போடு நிலங்களை கையகப்படுத்தும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

வளையமாதேவி, மேல்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 25ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டது. 

இந்நிலையில், நிலம் எடுப்பதை கண்டித்து, எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் இன்று (மார்ச் 11) பந்த் நடத்துவதாக அறிவித்தது பாமக. 

“கடலூரில் அப்பாவி உழவர்களின் விளைநிலங்களை அடக்குமுறையை ஏவி பறிக்கும் என்.எல்.சி மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்காக முழு அடைப்பு போராட்டத்திற்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவச் செல்வங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார். 

பாமக பந்த் அறிவித்ததை தொடர்ந்து, போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.  கடலூரில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்குகின்றன. சிதம்பரம், வடலூர், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் திறந்திருக்கின்றன.  குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் காலையில் மூடப்பட்டிருந்த கடைகள் 11 மணியளவில் திறக்கப்பட்டன. மந்தாரக்குப்பம் பகுதியில் மட்டும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.  

பேருந்துக்கு முன் செல்லும் போலீஸ் வாகனம்

இந்தசூழலில் கடலூரில்  இன்றைய நிலவரம் அறிய களமிறங்கினோம். 

 கடலூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் பெரும்பான்மையாக இருப்பதால் பந்த்தை வெற்றி பெற வைக்க பல விதமான திட்டங்களை  பாமகவினர் வைத்திருந்தனர்.  அந்த திட்டங்களையும், பந்த்தையும்  முறியடிக்க காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். 

சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி  சங்கர் ஆலோசனைப்படி, வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் போலீசார், உட்கோட்டம் வாரியாக பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் 7 காவல்துறை உட்கோட்டம் உள்ளது. ஒவ்வொரு உட்கோட்டத்துக்கும் ஒரு எஸ்.பி, ஒரு ஏ.டி.எஸ்.பி, இரண்டு டி.எஸ்.பி மற்றும் போலீசார் நியமிக்கப்பட்டனர். 

நெய்வேலி உட்கோட்டத்துக்கு மதுரை டிசி சாய் பிரனீத், சிதம்பரம் உட்கோட்டத்துக்கு சேலம் டிசி மாடசாமி, விருத்தாசலம் உட்கோட்டத்துக்கு திருப்பூர் டிசி அபிஷேக் குப்தா, பண்ருட்டி உட்கோட்டத்துக்கு செங்கல்பட்டு எஸ்பி பிரதீப், திட்டக்குடி உட்கோட்டத்துக்கு வேலூர் எஸ்.பி ராஜேஷ், சேத்தியாதோப்பு உட்கோட்டத்துக்கு கள்ளக்குறிச்சி எஸ்.பி மோகன் ராஜ், கடலூர் உட்கோட்டத்துக்கு  திருச்சி டிசி சுரேஷ் குமார்  ஆகியோரும், கூடுதலாக கடலூர் எஸ்பி ராஜாராம், திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன், காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெய்வேலி, பண்ருட்டி, கடலூர் ஆகிய மூன்று உட்கோட்டத்துக்கு காஞ்சிபுரம் டிஐஜி பகலவன், திட்டக்குடி, விருத்தாசலம், சேத்தியாதோப்பு, சிதம்பரம் ஆகிய நான்கு உட்கோட்டத்திற்கு விழுப்புரம் டிஐஜி பாண்டியன் ஆகியோரது மேற்பார்வையில் பாமக நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். 

நேற்று இரவு முதல் இன்று காலை 6 மணி வரை 56 பேரும், 6 மணியில் இருந்து தற்போது வரை சுமார் 200 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பாமக முக்கிய நிர்வாகிகளை போலீசார் செல்போன் லொகேஷனை வைத்து  கண்டுபிடித்து கைது செய்ய செல்லும் போது,  ‘எங்களை கைது செய்யாதீர்கள், நாங்களே வந்து கைதாகிறோம். ஒரு பொதுஇடத்தில் கோஷம் போட்டு போட்டோ எடுத்துக்கொள்கிறோம். அப்போது எங்களை கைது செய்து கொள்ளுங்கள்’ என்று பாமகவினர் கூறுகின்றனர். போலீசாருக்கும் பாமகவினருக்கும் இடையிலான இந்த உடன்பாட்டில் பாமகவினர் சரணடைந்தும் வருகிறார்கள். 

பாமக மாவட்ட செயலாளர் சன் முத்துகிருஷ்ணன் லொகேஷனை பார்த்து தேடிக்கொண்டிருந்த போலீசாரிடம் அவர், ‘சார் நாங்கள் எதுவும் செய்யமாட்டோம். காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறோம். திருப்பாபுலியூர் சீமாட்டி கடை அருகில்  ஒரு கோஷம் போட்டு போட்டோ எடுத்துக்கொள்கிறோம். அதன் பிறகு கைது செய்துகொள்ளுங்கள்” என கேட்டுக்கொண்டார். அதன்படி அவர் கைதும் செய்யப்பட்டார். 

கைதாகும் சன் முத்துகிருஷ்ணன்

கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு  பேருந்தும் போலீஸ் பாதுகாப்போடு இயக்கப்பட்டு வருகிறது. கடைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

வியாபாரிகளின் மன நிலையை அறிந்துகொள்ள, வடக்கு மண்டல ஐஜி கண்ணன், பண்ருட்டி மார்க்கெட்டில் உள்ள 50க்கும் மேற்பட்ட வியாபாரிகளை நேரடியாக சந்தித்து பேசினார். பாதுகாப்பு குறைபாடுகள் எதாவது உள்ளதா? மிரட்டல் எதாவது உள்ளதா?. அப்படி இருந்தால் எனக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள். இன்னும் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றால் சொல்லுங்கள் என கேட்டார். 

போலீசாருடன் வடக்கு மண்டல ஐஜி கண்ணன்

அதற்கு அவர்கள்,  ‘வேண்டாம்… வியாபாரிகள் சங்கத்தினரே முடிவு செய்து அனைத்து கடைகளை திறந்திருக்கிறோம்’ என்று கூறிவிட்டனர்,

இப்படி போலீஸ் போட்ட திட்டத்தால் பாமகவினரின் பந்த் நீர்த்துபோய்விட்டதாக சொல்கிறார்கள் பாமக நிர்வாகிகள். 

அதேநேரம் பாமக நிர்வாகிகளோ, “நாங்கள் என்.எல்.சி. நிறுவனத்தால் பாதிக்கப்படும் மக்களுக்காக இந்த போராட்டத்தை நடத்துகிறோம். தேர்தல் பிரச்சினைக்காகவோ, கட்சிப் பிரச்சினைக்காகவோ இந்த போராட்டம் அல்ல. கடலூர் மாவட்ட மண்ணின் மைந்தர்களுக்காக இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம். ஆனால் கடலூர் மாவட்ட பாமக நிர்வாகிகளை கைது செய்வதற்காக மதுரை, சேலம், திருப்பூர், சேலம், வேலூர் என்று தமிழகம் முழுவதில் இருந்தும் போலீஸாரை குவித்து எங்கள் போராட்டத்தை முடக்க முழு வீச்சில் இறங்கியுள்ளது அரசு. இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார்கள்.

வணங்காமுடி

விமர்சனம் : அகிலன்!

அதிகரிக்கும் கொரோனா – எச்3என்2 காய்ச்சல்: வேறுபாடுகள் என்னென்ன?

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *