வன்னியர் சமுதாயத்துக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கேட்டு 1987 செப்டம்பர் 17ஆம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் தொடர் மறியல் போராட்டம் நடந்தது.
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 21 பேர் பலியானார்கள்.
இவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டுமென, 2019 மக்களவைத் தேர்தலின் போது, பிரச்சாரத்துக்கு வந்த முதல்வர் ஸ்டாலினிடம் எம்.பி.ஜெகத்ரட்சகனும், தற்போதைய விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வான அன்னியூர் சிவாவும் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று, விழுப்புரம் – திருச்சி பைபாஸ் சாலையில் மேற்குபுரத்தில் சமூக நீதி போராளிகளின் மார்பளவு சிலைகளுடன் கூடிய மணிமண்டபமும், திமுக முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் முழு உருவ சிலையுடன் கூடிய நினைவு அரங்கமும் கட்டப்பட்டு, கடந்த நவம்பர் 28ஆம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், நவம்பர் 25ஆம் தேதி ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலினிடம், பாமக நிறுவனர் ராமதாஸ், அதானி குறித்து வெளியிட்ட அறிக்கை பற்றி கேட்டதற்கு, “அவருக்கு வேறு வேலையில்லை. தினம்தோறும் ஒரு அறிக்கை வெளியிடுவார். அதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது… ஒகே…” என்று காட்டமாக பதில் சொன்னார்.
இதனால் கோபமான பாமகவினர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நவம்பர் 28ஆம் தேதி மணிமண்டபம் திறப்பு விழாவுக்கு வரவிருந்த முதல்வர் ஸ்டாலினுக்கு கருப்புக்கொடி காட்டவும் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் மழை வெள்ளம் காரணமாக அந்த நிகழ்ச்சி மறு தேதி அறிவிக்கப்படாமல் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, ஜனவரி 28, 2025 அன்று மணிமண்டபம் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
இந்தசூழலில், முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த பாமக நிறுவனர் ராமதாஸும், தலைவர் அன்புமணி ராமதாஸும் ஒரு வாரத்திற்கு முன்பே, பாட்டாளி சொந்தங்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சியை அறிவித்து, கடந்த 26ஆம் தேதி இரவு முதல் சேலத்தில் தங்கியுள்ளனர்.
அதேசமயம், மணிமண்டபம் திறப்பு நிகழ்ச்சிக்கு தியாகிகளின் குடும்பத்தில் இருந்து யாரும் செல்லாத வகையில் முயற்சியும் நடந்ததாக பாமக நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

அதேபோல், ஏ.கோவிந்தசாமிக்கு கட்டப்பட்ட நினைவு அரங்கம் விழாவிற்கும் அவர்களது குடும்பத்தினர் வருகைத் தர மறுப்புத் தெரிவித்திருந்தனர்.
ஏ.கோவிந்தசாமிக்கு 5 பிள்ளைகள்… இவரது மகன் ஏ.ஜி சம்பத் தற்போது பாஜகவில் இருக்கிறார். மற்றொரு மகனான அன்பழகன் வழக்கறிஞராக இருக்கிறார். இன்னொரு மகன் இளங்கோவன் மருத்துவர், புதுச்சேரியில் பிரபலமான மருத்துவமனையை நடத்தி வருகிறார். மகள் திலகவதி, இவரது கணவர் பாலசுப்ரமணியம், குடிநீர் வாரிய தலைமை பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். மற்றொரு மகள் மல்லிகா. இவரது கணவர் முன்னாள் ஐஏஎஸ் ஆதிமூலம்.
மணிமண்டப திறப்பு விழாவுக்கு வருகைத் தர ஆரம்பத்தில் மறுப்புத் தெரிவித்த இவர்கள், முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைப்படி ஜெகத்ரட்சகன் அன்னியூர் சிவா ஆகியோரின் தீவிர முயற்சியால் ஒட்டுமொத்த குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டனர்.

அமைச்சர் பொன்முடி, வருவாய்த்துறை, காவல்துறையினரின் முயற்சியால் 21 தியாகிகளின் குடும்பத்தில் இருந்து தலா ஒருவர் அழைத்து வரப்பட்டனர்.
கூடுதலாக விழாவிற்கு பாமகவின் ஆதரவு இருக்க வேண்டும் என்று மயிலம் சட்டமன்ற தொகுதி பாமக எம்.எல்,ஏ சிவக்குமாரை பங்கேற்க வைக்க ஜெகத்ரட்சகன், பொன்முடி ஆகியோர் தீவிர முயற்சி செய்தனர். அதன்படி, பாமக எம்.எல்.ஏ.சிவக்குமார் கட்சித் தலைமையிடம் தகவல் தெரிவித்துவிட்டு, அன்புமணி அறிவுறுத்தலின் பேரில் மணிமண்டப விழாவில் கலந்துகொண்டார்.

தொடர்ந்து மேடையிலேயே முதல்வர் ஸ்டாலினிடம் பாமக எம்.எல்.ஏ சிவக்குமார் மனு ஒன்றைக்கொடுத்தார். தனது தொகுதியில் வீடுர் அணையிலிருந்து பாதிரி புலியூர் வழியாக செல்லும் சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று அதில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்தநிலையில் நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்டத்துக்கான 10 அறிவிப்புகளை வெளியிட்டியிருந்த முதல்வர், 11ஆவது அறிவிப்பாக சிவக்குமாரின் கோரிக்கையை ஏற்று, வீடுர் அணை – பாதிரி பூலியூர் வரையிலான 15 கீ.மீ. சாலையை 8 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

பாமக எம்.எல்.ஏ சிவக்குமார் ஏற்கனவே, 2022ஆம் ஆண்டு, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று, ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு நடைபெற்ற சாதனை மலர் வெளியீட்டு விழாவிலும் கலந்துகொண்டார். அதோடு, மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டம் என திமுக திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.