எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் காலில் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் விழுந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் கபடி உள்விளையாட்டு அரங்கத்தை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று(டிசம்பர் 18)திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து கபடி போட்டிகளை தொடங்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியின்போது வருகை தந்த சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருள், மேடையில் இருந்த எடப்பாடி பழனிசாமி காலில்விழுந்து வணங்கினார். இதனை கண்டும் காணாமல் இருந்தார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி தன்னை கவனிக்கவில்லை என்று அந்தபக்கமும் இந்தபக்கமும் திரும்பிய பாமக உறுப்பினர் அருள், இறுதியாக அவரது பார்வையில் படும்படி சென்று நின்று கொண்டார்.
அப்போது அவருக்கு சால்வை அணிக்கும்படி பழனிசாமி தெரிவித்ததை அடுத்து விழா குழு சார்பில் அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.
சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட முத்துநாய்க்கன்பட்டியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையை மூடக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். தனது தொகுதியில் உள்ள கடை என்பதால் பாமக எம்எல்ஏ அருளும் மக்களுக்கு ஆதரவாக போராடினார்.
அப்போது ஒருமாதத்தில் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட டாஸ்மாக் மேலாளர் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தார். ஆனால் சொன்னபடி கடை மூடப்படாததால் எம்எல்ஏ அருள் டாஸ்மாக் கடைக்கு சென்று கடை ஊழியர்களின் காலில் விழுந்து, கடையை மூட நடவடிக்கை எடுங்கள் என கெஞ்சிகேட்டுக் கொண்டார்.
எம்.எல்.ஏ அருள் டாஸ்மாக் கடை ஊழியர்கள் காலில்விழுந்து கெஞ்சி கேட்ட சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி எம்.எல்.ஏ அருளிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இதே அருள்தான் தற்போது எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்திருக்கிறார். ஆனால் தற்போது காலில்விழுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார் அருள் என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
கலை.ரா
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக பேரணி: தடுத்து நிறுத்திய போலீஸ்!
எங்கள் அணியினரை வீழ்த்திய வைரஸ்: பிரான்ஸ் பயிற்சியாளார் போட்ட குண்டு!