மாநில அந்தஸ்தை இழந்து மாம்பழம் சின்னம் கோரும் பாமக
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட மாம்பழம் சின்னம்கோரி பாமக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு இன்று (ஜூன் 18) கடிதம் எழுதப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் காலியாக உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது. தேமுதிகவும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது.
இதற்கிடையே, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் பாமக இணைந்தது. அந்த தேர்தலில் தமிழகத்தில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இதில், தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளராக செளமியா அன்புமணி போட்டியிட்டார். ஆனால், தேர்தல் முடிவில் செளமியா அன்புமணி சுமார் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
தேர்தல் முடிவில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 4.23 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று இருந்தது. இதன் காரணமாக, பாமக தனது மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது.
பாமக மாநில கட்சி அந்தஸ்தை இழந்ததால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அக்கட்சிக்கு மாம்பழம் சின்னம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
கடந்த ஜூன் 13ஆம் தேதி பாமக உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், “கடந்த 2 தேர்தல்களிலும் கட்சி அங்கீகாரத்தை இழந்திருக்கிறோம். கஷ்டப்பட்டு பெற்ற சின்னத்தை காப்பாற்ற வேண்டும். அடுத்தடுத்து நமக்கு சின்னம் கிடைக்குமா என்பது கேள்விக் குறியாக உள்ளது.
நான் சொல்வதை யாரும் கேட்பது இல்லை. நான் ஒரு முடிவு எடுத்தால் நீங்கள் ஒரு முடிவு எடுக்கிறீர்கள்” என கோபமாக பேசியதாக நமது மின்னம்பலம் டிஜிட்டல் பத்திரிக்கையில் ஜூன் 14ஆம் தேதி செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பாமக மாநில அந்தஸ்தை இழந்தது குறித்து நேற்று (ஜூன் 17) பேசியதாவது, “நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சின்னத்தில் வாக்கு கேட்டு விட்டு, தற்போது இடைத்தேர்தலில் வேறு சின்னத்தில் வாக்கு கேட்டால், மக்கள் எப்படி அவர்களை மதிப்பார்கள்?” என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், மாம்பழம் சின்னத்தை ஒதுக்கக்கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பாமக சார்பில் இன்று (ஜூன் 18) கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தேர்தல் முடிவின் படி, விசிகவும், நாதகவும் மாநில கட்சி அந்தஸ்து பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழகத்தில் குறைந்த பால் விலை : எவ்வளவுன்னு தெரிஞ்சுகோங்க!
நீட் தேர்வு குளறுபடி : தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!