தமிழகத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள்களை ஒழிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 30ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் இராமதாஸ் கடந்த வாரம் (ஜூலை 24) அறிவித்தார்.
அந்த வகையில், இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் ”போதைப்பொருள் பிடியிலிருந்து மாணவர்களை காப்பாற்று”, “கஞ்சா + லஞ்சம் = பேரழிவு” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
போராட்டத்தின் போது பேசிய அன்புமணி ராமதாஸ், “தமிழகத்தில் உள்ள ஜனத்தொகையில் 50 லட்சம் இளைஞர்கள் இந்த போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருகின்றனர். 50 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஹெராயின், கஞ்சா, குட்கா என போதைக்கு அடிமையாகி இருப்பது தமிழகத்தை தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் யாராவது ஒருவர் இந்த போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்.
இதற்கு காரணம் அனைத்து பக்கங்களிலும் போதை பொருட்கள் கிடைக்கின்றன. இன்று, நேற்றல்ல கடந்த 10,15 ஆண்டுகளாக அதிகரித்து இன்று உச்சத்தில் இருக்கிறது மாணவர்களும், இளைஞர்களும் இந்தியாவை சுமக்க வேண்டியவர்கள் சுமையாகி விடுவார்களோ என்ற அச்சம் என் மனதில் ஆழமாக உள்ளது.
அதன் காரணமாகவே இன்று முதல்கட்ட ஆர்ப்பாட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறோம். அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மிகப்பெரிய போராட்டங்களை தமிழ்நாடு பார்க்கும்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கஞ்சா பயன்பாட்டை கட்டுப்படுத்தக் கூடாது. முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். காவல் துறைக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. காவல்துறைக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலம் மறைமுகமாக விற்பனைக்கு அனுமதிக்கிறார்கள். சென்னை, திருவண்ணாமலை, சேலம், மதுரை, நீலகிரி, திருச்சி பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 9 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாக போதை பழக்கம் அதிகரித்திருப்பதாக தெரியவருகிறது. காவல்துறையின் நடவடிக்கை போதாது. போதை வழக்கில் கைது செய்தவர்களை குண்டர் சட்டத்தில் போட வேண்டும். எல்லா காவல்துறை அதிகாரியையும் நான் குறை கூறவில்லை. ஒரு சிலர் தான் தவறு செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மற்றவர்கள் பயப்படுவார்கள். திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறது. ஆனால் ஒரே ஒரு மதுக்கடை கூட மூடவில்லை” என்று கூறினார்.
- க.சீனிவாசன்