அதானி குழுமத்தின் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், தமிழகத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளதாக பாமக செய்தி தொடர்பாளர் பாலு தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நேற்று (நவம்பர் 28) செய்தியாளர்களிடம் பேசிய பாலு, “பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமகவினர் தன்னெழுச்சியாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினார்கள். வாணியம்பாடியில் நடைபெற்ற போராட்டத்தில் பாமகவை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
அந்த 13 பேரையும் திருச்சி, சேலம், வேலூர் என வெவ்வேறு சிறைகளில் அடைத்துள்ளனர். இது ஒரு மிகப்பெரிய மனித உரிமை மீறல். ஒரு தீவிரவாதியைப் போல, அவர்களை வெவ்வேறு சிறைகளில் அடைத்திருப்பது என்பது திமுக அரசு பாமக மீது ஆத்திரமும் கோபமும் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.
அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், தமிழக மின்வாரியத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது. தேசிய மின்பகிர்வு ஆணையத்திடம் மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அதானி நிறுவனம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அதேபோல ஜூலை மாதம் 16-ஆம் தேதி அதானியும் தமிழக முதல்வர் ஸ்டாலினும் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்கள் என்று செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், அதுகுறித்தும் இதுவரை விளக்கம் அளிக்காமல் இருக்கிறார்கள். இதை கடந்து செல்லலாம் என்று திமுக நினைத்தால், நிச்சயமாக நடக்காது.
ஏனென்றால் மின்வாரிய ஊழல் தொடர்பான பிரச்சனையை மக்களிடத்தில் நாங்கள் எடுத்து செல்ல இருக்கிறோம். மேலும், அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் தமிழக மின்வாரிய பெயர் இடம்பெற்றது தொடர்பாக சிபிஐ மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நாங்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மக்களே அலர்ட்… இன்று மதியம் உருவாகிறது புயல் – வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்!
புதுக்கோட்டை: பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!